அமைச்சர் வசந்த ,மஹிந்த ஜயசிங்க ஆகியோரிடம் விரைவில் வாக்குமூலம்
கல்கிசை நீதிவான் சதுரிகா டி சில்வா இதற்கான உத்தரவை நேற்று கொழும்பு மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு பிறப்பித்தார்.

தேசிய தொழிலாளர் நிறுவனத்துக்கு சொந்தமான இரு மாடி கட்டடத்தை கொண்ட இடத்தை, போலி உறுதி ஒன்றினை தயாரித்து 36 இலட்சம் ரூபாவுக்கு குத்தகைக்கு கொடுத்ததன் ஊடாக மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வணிக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, தொழிலஆளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, கடுவலை நகர பிதா ரஞ்சன் ஜயலால் ஆகியோரிடம் வாக்கு மூலம் பதிவு செய்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்கிசை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்கிசை நீதிவான் சதுரிகா டி சில்வா இதற்கான உத்தரவை நேற்று கொழும்பு மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்கு பிறப்பித்தார்.
இந்த மோசடி விவகார வழக்கு கல்கிசை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது விசாரணையின் போது கண்டறியப்பட்ட ஆவணங்களான குறித்த கட்டடத்தின் சான்றளிக்கப்பட்ட உறுதிப் பத்திரத்தின் நகல், வசந்த சமரசிங்கவை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் தலைவராக அங்கீகரித்த 2017 செப்டம்பர் 3 ஆம் திகதி அன்று நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தின் அறிக்கை, இல 166, 206 மற்றும் 207 எனும் குத்தகை பத்திரங்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள், குறித்த சொத்தின் உரிமை தொடர்பில் கடுவலை மாவட்ட நீதிமன்றம், கல்கிஸ்ஸ மாவட்ட நீதிமன்றம் மற்றும் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு அரிக்கைகலின் நகல்கள் ஆகியவை நீதிமன்றத்தில் கொழும்பு மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேலதிக அறிக்கை ஊடாக சமர்ப்பிக்கப்பட்டன.