மன்னார் காற்றாலை திட்டம்: ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு பொது அமைப்புகளின் ஒன்றியம் கடிதம்
மன்னார் மக்களின் கோபமும், வலியும் நியாயமானது என்பதை புரிந்து கொள்ள தவறுகிறீர்கள் என்பது கவலையளிக்கின்றது.

மன்னார் காற்றாலை திட்டத்தை முன்னெடுத்தல் மற்றும் கனிம மணல் அகழ்வு ஆகிய விடயங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படுகையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தீர்மானம் ஜனநாயகமாற்றதாக உள்ளது என்று சுட்டிக்காட்டி மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.
மன்னார் பொதுமக்கள் ஒன்றியத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் அனுப்பியுள்ளகுறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த பல வருடங்களாக காற்றாலை கனிம மண் அகழ்வுக்கு எதிராக சனநாயகப் போராட்டம் நடத்தி வருகின்றோம். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பாராளுமன்றத்தில் அமைச்சர்களுடனான கலந்துரையாடலும் பின்னர் தங்களுடனான உரையாடலும் நடைபெற்றன. அதன் விளைவாக ஒரு மாத காலம் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
பின்னர் துறை சார்ந்த அதிகாரிகள் குழு பொது அமைப்புகளுடனும், வலுச்சக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுடனும் கலந்துரையாடல் நடத்தியிருந்தனர். இக்கூட்டங்களில் மக்கள் தமது எதிர்ப்புணர்வை கூட்டாக வெளிப்படுத்தியிருந்தனர். அந்த மக்களின் உணர்வுகளையும் பாதிப்பின் வலிகளையும் அனுபவரீதியாக எடுத்துரைத்தும் பயனளிக்கவில்லை.
மக்களினுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக தாங்களே தீர்மானத்தை எடுத்திருப்பது சனநாயக முறைமைக்கு உகந்ததல்ல.
வாதங்கள் என்பது இருத்தரப்பு பகிர்வு ஊடாக முரண்பாடுகளைக் களைந்து குறைந்தபட்ச விட்டுக்கொடுப்புடனாவது தீர்மானத்துக்கு வருவது தான் இருதரப்பினரும் ஒருசேர நிலைப்பாட்டுக்கு வருவது என்பதே ஜனநாயகப் பண்பியல்பாகும். இது நீதிமன்ற தீர்ப்பு போல் உள்ளது. அரச இயந்திரம் என்பது ஆட்சி மாற்றத்திற்கு பின்னும் காட்சி மாறவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
எமது மக்களினுடைய வாழ்வியல் உரிமைகளை புரிந்து கொள்ளாமல் பொலிஸ் அதிகாரிகளும் நடந்து கொள்வது என்பது அடிப்படை உரிமையை மீறுவதுடன் ஜனநாயக ஆட்சிக்கு உரித்துடையதல்ல. எனவே இறுதி முடிவு எடுப்பதற்கு முதல் எம்முடன் கலந்துரையாடியிருக்க வேண்டியது மக்களாட்சித் தத்துவத்தின் இலக்கணமாயிருக்க வேண்டும் என்பதே மரபாகும்.
ஆகவே கனிம மண் அகழ்வுத் திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக எந்த விதமான அறிவித்தலும் இதுவரை வெளியிடப்படவில்லை. கனிம மண் அகழ்வில் ஈடுபடவுள்ள இரண்டு நிறுவனங்களும் வழமையான பணிகளை முன்னெடுத்து வருகின்றன. மன்னார் மக்களின் கோபமும், வலியும் நியாயமானது என்பதை புரிந்து கொள்ள தவறுகிறீர்கள் என்பது கவலையளிக்கின்றது.
இச்செயல் ஜனநாயக ஆட்சி அதிகாரத்தின் சட்டவாக்க கோட்பாடு, மக்களாட்சி தத்துவத்தை மீறும் செயலாகும். இது கடந்த கால ஆட்சியாளர்களுக்கும் தங்களுக்கும் வேறுபாடற்ற நிலை காணப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் உணர்கிறார்கள். அந்த உணர்வு தங்கள் மீதான இடதுசாரித்துவ பார்வையை கேள்விக்குட்படுத்துவதாகவே எமக்கு புலப்படுகிறது.
பரிகாரத்துக்கு முதல் சமூக சமநீதி அவசியம் என்பதனை வலியுறுத்த விரும்புகிறோம். மனிதனின் நிம்மதியான வாழ்க்கை சீர்கெடும்போது இருப்பியல் முறைமை சிதைவடைந்துவிடும் என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் என்பது வேதனைக்குரியது. ஆகவே ஒரு தரப்பாக வாதங்களின் அடிப்படையில் தீர்மானம் எடுப்பது ஏற்புடையதல்ல. இதனை மீள்பரிசீலனை செய்து மீண்டும் எம்முடன் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வரவேண்டுமென தங்களிடம் அவசரமாகவும் அவசியமாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.