தமிழரசுடன் உடன்படிக்கை செய்த விக்கியை பாதுகாக்க யாருமில்லை; சித்தார்த்தன்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை ஜுன் 14 ஆம் திகதி அப்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது' என அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்குக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி தாமே அவரைப் பாதுகாத்ததாக சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான புளொட்டின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், எதிர்வருங்காலத்தில் விக்னேஸ்வரனுக்கு எதிராக தமிழரசுக்கட்சி முன்னெடுக்கக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை எனத் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் நல்லூர் பிரதேச சபையில் இணைந்து ஆட்சியமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றிக் கருத்துரைத்த ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியில் அங்கம்வகிக்கும் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவரப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
'வடமாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராகக் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை ஜுன் 14 ஆம் திகதி அப்போதைய வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிடம் கையளிக்கப்பட்டது' என அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வேளையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, அந்நெருக்கடியிலிருந்து சி.வி.விக்னேஸ்வரனைப் பாதுகாத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரலாற்றை விக்னேஸ்வரன் மறந்துவிட்டதாகத் தெரிவித்த சித்தார்த்தன், எதிர்வருங்காலத்தில் தமிழரசுக்கட்சியினால் விக்னேஸ்வரனுக்கு எதிராக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளிலிருந்து அவரைப் பாதுகாப்பதற்கு யாரும் இல்லை என்றார்.