செப்டம்பரில் ஐந்தாவது நிதி வசதி மதிப்பாய்வு: பணிப்பாளர் ஜூலி கோசெக்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பணவீக்கம் குறைவு, மேம்படுத்தப்பட்ட வருவாய் வசூல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளதாக ஜூலி கோசெக் கூறினார்.

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மதிப்பாய்வு செப்டம்பர் 2025 இல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் ஜூலி கோசெக் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதிய ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைக் கூறினார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை நேர்மறையாக இருந்தாலும், உலகளாவிய சந்தை மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஜூலி கோசெக் வலியுறுத்தினார்.
ஐந்தாவது மதிப்பாய்வின் போது இந்தக் காரணிகள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகளாவிய சந்தை, பொருளாதார மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகளின் தாக்கம் உட்பட நாட்டின் பொருளாதாரம் குறித்த முழுமையான மதிப்பீடு இந்த மதிப்பாய்வின் போது மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2025 ஜூலை 1 ஆம் திகதி, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு நான்காவது மதிப்பாய்வை நிறைவு செய்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியது. இதன்மூலம், விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.74 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது.
இதற்கிடையில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பணவீக்கம் குறைவு, மேம்படுத்தப்பட்ட வருவாய் வசூல் மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பு ஆகியவை ஊக்கமளிக்கும் முடிவுகளை வழங்கியுள்ளதாக ஜூலி கோசெக் கூறினார்.
2024 ஆம் ஆண்டில் நாடு நெருக்கடிக்குப் பிந்தைய 5சதவீதம் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியம் கவனம் செலுத்துகிறது. 2022இல் 8.2சதவீதமாக இருந்த இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம், 2024இல் 13.5சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது வலுவான நிதி செயல்திறனைப் பிரதிபலிப்பதுடன், கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்ததன் மூலம் சர்வதேச நாணய நிதியம் திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்திறன் வலுவாக உள்ளதாக ஜூலி கோசெக் மேலும் தெரிவித்தார்.