'கன்சைட்' சித்திரவதை சிறைக்கூண்டுகள் : முன்னாள் கடற்படை தளபதி உலுகேதென்னவின் வாக்கு மூலத்தில் அதிர்ச்சி தகவல்கள்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இருக்கும் ‘கன்சைட்’ எனும் சட்ட விரோத நிலத்தடி சித்திரவதை முகாம் சட்ட விரோத சிறைக் கூண்டு என்று முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்ன சி.ஐ.டி. விசாரணையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் படியும் மேலும் பல சாட்சிகளின் பிரகாரமும் குறித்த சட்ட விரோத சிறையில் இருவெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 60 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தததாக சி.ஐ.டி. யினர் விசாரணையில் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சி.ஐ.டி. அதிகாரிகள் குறித்த 60 பேரும் யாரென அடையாளம் காண்பதற்கு, கடற்படை தளபதியிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை பொல்கஹகவல நீதிவானின் உத்தரவூடாக கோரியுள்ளனர்.
எனினும் அந்த தகவல்கலை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட இதுவரை வழங்கவில்லையென சி.ஐ.டி.யினர் தெரிவித்தனர்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பில் சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசாரணை பிரிவு விசாரணைகளை முன்னெடுத்தது.
இந்த வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்பிலான விசாரணைகளில் ‘கன் சைட்’ எனும் நிலத்தடி வதை முகாம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்று நடத்திய விசாரணைகலின் போது கேகாலையைச் சேர்ந்த சாந்த சமரவிக்ரம அல்லது கேகாலை சாந்த, இப்பாகமுவையைச் சேர்ந்த பிரதீப் ஆகியோரின் கடத்தல்கள் தொடர்பில் தகவல் வெளிப்பட்டன.
இந்நிலையில் கேகாலை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றின் பிரதிவாதியான சாந்த சமரவிக்ரம, இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த பிரதீப் ஆகியோர் ‘கன்சைட்’ முகாமில் இருந்தமைக்கான ஆதாரங்களை குற்றப் புலனயவுப் பிரிவு கன்டுபிடித்து அது குறித்து கோட்டை நீதிவானுக்கு அறிக்கையும் சமர்பித்தனர்.