எந்தவொரு ஜனாதிபதிக்கும் 'தனிப்பட்ட' என்ற சொற் பதத்தை பிரயோகிக்க முடியாது: வஜிர அபேவர்தன
ஒதுக்கபடாத நிதிக்கு அப்பால் பொது நிதி பயன்படுத்தப்படவில்லை என்பது முதலாவது காரணியாகும்.
இலங்கையின் அரசியலமைப்பிற்கமைய எந்தவொரு ஜனாதிபதிக்கும் தனது பதவி காலத்தில் 'தனிப்பட்ட' என்ற சொற் பதத்தை பிரயோகிக்க முடியாது. அதேவேளை ஜனாதிபதிக்குரிய நிதி ஒதுக்கீட்டுக்கு அப்பால் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது நிதி பயன்படுத்தப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
மேலும் நீதிமன்றத்தில் மின் தடை ஏற்படுவது சாதாரண விடயமல்ல என்பதை சுட்டிக்காட்டிய அவர், இந்த விசாரணைகளின் போது மின்தடை ஏற்பட்டதா? அல்லது ஏற்படுத்தப்பட்டதா என்றும் கேள்வியெழுப்பினார்.
கொழும்பு – பிளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் 23-08-2025 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றத்தில் விசாரணைகளின் போது மின்தடை ஏற்பட்டது. மின் தடை ஏற்பட்டதா அல்லது ஏற்படுத்தப்பட்டதா என்பது தெரியாது. சந்தேகநபரொருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கும் நிலைமை ஏற்பட்டால் நீதிமன்றத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, மெழுவர்த்தி ஏற்றப்பட்டு மரண தண்டனை தீர்ப்பு எழுத்தப்பட்ட பேனை உடைக்கப்படுவது சம்பிரதாயமாகும்.
இந்நிலையில் இந்த விசாரணைகளின் போது மின் தடை ஏற்பட்டமையானது எம் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சுமார் ஓரிரு மணித்தியாலங்களின் பின்னர் மின்தடை நிவர்த்தி செய்யப்பட்டது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். இவை தொடர்பில் நாட்டின் ஒட்டுமொத்த சட்டத்தரணிகளும் உன்னிப்பான அவதானத்துடனிருக்கின்றனர்.
அந்த வகையில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது டுவிட்டர் தளத்தில் செய்துள்ள பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முன்னாள் பொது நிர்வாக அமைச்சர் என்ற ரீதியில், முன்னாள் ஜனாதிபதியின் இந்த விஜயம் பொது நிர்வாகம் சார்ந்ததாகும். அதாவது வரவு – செலவு திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டமையாகும்.
ஒதுக்கபடாத நிதிக்கு அப்பால் பொது நிதி பயன்படுத்தப்படவில்லை என்பது முதலாவது காரணியாகும். அந்த நிதிப்பயன்பாடு தொடர்பில் சட்டமா அதிபரால் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாயக் கொண்டு அவதானிக்கும் போது இவ்வாறானதொரு விடயம் அதில் குறிப்பிடப்படவில்லை என்பது இரண்டாவது காரணியாகும்.
இவ்வாறான செயற்பாடுகளின் போது எந்தவொரு ஜனாதிபதியினதும் பதவி காலத்தில் அவர்களால் 'தனிப்பட்ட' என்ற சொற்பதத்தை பயன்படுத்த முடியாது என்பது சட்டத்தின் அடிப்படையிலும் அரசியலமைப்பின் அடிப்படையில் நான் அறிந்த விடயமாகும். உள்நாட்டிலிருந்தாலும் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும் ஜனாதிபதிகளுக்கு 'தனிப்பட்ட' என்ற சொற்பதத்தை உபயோகிக்க முடியாது என்றார்.





