‘கரந்தெணிய’ சுத்தாவின் சகா கைது - துப்பாக்கியும் தோட்டாக்களும் மீட்பு
காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வந்துரம்பை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 21 கிராம் 710 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரும் பாதாள உலகக்குழு தலைவரென அறியப்படும் ஜயலத் த சில்வா எனும் கரந்தெணிய சுத்தாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கான துப்பாக்கிகளை கொண்டுவந்த அல்லது விநியோகித்த சந்தேகநபர் காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, வந்துரம்பை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 21 கிராம் 710 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் பத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வந்துரம்பை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபரிடமி மேற்கொள்ளப்பட் விசாரணையை அடுத்து, குறித்த சந்தேகநபர்,கரந்தெணிய சுத்தாவின் வழிகாட்டலில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஹிக்கடுவை பகுதியில் இடம்பெற்ற மனித படுகொலை, மீட்டியாகொடை பகுதியில் கார் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் உட்பட ஐவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செயதமை மற்றும் அம்பலாங்கொடை பகுதியில் தனியார் நிறுவன முகாமையாளர் ஒருவரைப் படுகொலை செய்த சம்பவங்களுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை மற்றும் குற்றவாளிகள் தப்பிச் செல்ல உதவியமை உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.
அத்துடன், குமாரகந்தை பகுதியில் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் இவருக்குத் தொடர்பு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பத்தேகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (15) முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கரந்தெணியசுத்தாவின் சகோதரனும் அண்மையில் இந்தியாவின் புதுடெல்லி விமான நிலையத்தில் வைத்து இந்திய பாதுகாப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டார். இந்தியாவிலிருந்து பிறிதொரு நாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போது மேற்படி சந்தேகநபர் அந்நாட்டு பாது காப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.





