மகா சங்கத்தின் ஆலோசனையுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஆனந்த விஜேபால
தற்போதைய அரசாங்கம் தலாதா மாளிகை பெரஹேர மற்றும் குருநாகல் எத்கந்த விகாரை பெரஹேரா போன்றவற்றை சிறப்பாக நடத்தியுள்ளதுடன், சமாதான நடைபயணத்தையும் ஊக்குவித்து வருகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பெரும் அளவிலான போதைப்பொருளுடன் 22 பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், மகா சங்கத்தினரின் கௌரவத்தையும் பௌத்த சாசனத்தின் ஒழுக்கக்கோவைகளையும் பாதுகாக்கும் வகையில் அவர்களின் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, நாட்டின் சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக எவ்வித தராதரமும் பாராது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
27-04-2026 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிளலிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து 110 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் பிக்குகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய விசாரணைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மகா சங்கத்தினரின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் ஒரு பக்கத்தில் செயற்படும் அதேவேளை, போதைப்பொருளுடன் சிக்கிய பிக்குகள் தொடர்பில் சட்டப்பூர்வமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசாங்கம் உரிய முறையில் முன்னெடுக்கும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக, இவ்வாறான குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது நாம் எவருடைய தராதரத்தையோ அல்லது அந்தஸ்தையோ பார்ப்பதில்லை. எவ்வித பாரபட்சமும் இல்லை. சட்டத்தின் முன்னால் அனைவரும் சமமானவர்கள்.
பலவீனமானவர்களுக்கு ஒரு சட்டமும் பலமானவர்களுக்கு ஒரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட இந்த அரசாங்கத்தின் கீழ் ஒருபோதும் இடமில்லை. யாராவது சட்டவிரோதமாகச் செயல்பட்டால், அதில் தலையிட்டு அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கத் தேவையான அனைத்துப் நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் தற்போது மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாகவே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த தற்போதைய ஜனாதிபதியின் கீழ் இந்த அரசாங்கம் அமைக்கப்பட்ட போது, மதம் மற்றும் கலாசாரம் சீரழிக்கப்படும் எனவும், தானம் வழங்குவது தடைபடும், பெரஹெரா போன்ற ஊர்வலங்கள் நிறுத்தப்படும் எனவும் பல்வேறு போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், தற்போதைய அரசாங்கம் தலாதா மாளிகை பெரஹேர மற்றும் குருநாகல் எத்கந்த விகாரை பெரஹேரா போன்றவற்றை சிறப்பாக நடத்தியுள்ளதுடன், சமாதான நடைபயணத்தையும் ஊக்குவித்து வருகின்றது.
எனவே, அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்கள் குறித்து நாம் விழிப்புடன் இருக்கிறோம். இச்சம்பவம் தொடர்பில் கௌரவ மகா சங்கத்தினரின் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக பாரபட்சம் பார்காது சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும். என்றார்.





