இலங்கை கோரிக்கை விடுத்தால் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை வழங்கத் தயார் – ஈரானிய தூதுவர்
ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களைப் போன்று அமெரிக்க போர் விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டமை குறித்து ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மூலமே அறிந்துகொண்டோம்.
இலங்கை ஈரானின் மிகநெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக வலுவான ஒத்துழைப்பு பேணப்பட்டுவருகிறது. அதற்கமைய மோதல்கள் தீவிரமடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்தால், அவற்றை விநியோகிப்பதற்கு ஈரான் தயாராக இருப்பதாக இலங்கைக்கான ஈரானியத்தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத்தாக்குதலை அடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல்கள் வலுப்பெற்றிருக்கும் பின்னணியில், இவ்விவகாரத்தில் சமகால நிலைவரம் மற்றும் ஈரானின் நிலைப்பாடு என்பன குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவரின் இல்லத்தில் 23-03-2026 அன்று விசேட செய்தியாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு இலங்கையுடன் தொடர்புபட்ட வகையில் அவர் குறிப்பிட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை ஈரான் விநியோகிக்குமா?
இலங்கை ஈரானின் மிகநெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகும். இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக வலுவான ஒத்துழைப்பு பேணப்பட்டுவருகிறது. தற்போது தீவிரமடைந்துள்ள மோதல்களுக்கு மத்தியிலும் ஈரானின் நட்பு நாடுகள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்படவோ அல்லது மூடப்படவோ இல்லை. அதன்படி தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் மற்றும் ஏனைய அத்தியாவசியப்பொருட்களை வழங்குமாறு இலங்கை அரசாங்கம் ஈரானிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில், அவற்றை விநியோகிப்பதற்கு ஈரான் தயாராக இருக்கிறது.
ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் பங்கேற்காதது ஏன்?
அதேவேளை கடந்த வாரம் ஏற்பாடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் பங்கேற்காமைக்கு விசேட காரணங்கள் எவையுமில்லை. எமது கப்பல்களிலிருந்த வீரர்கள் வருகைதந்திருந்தமையினால், ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வது சாத்தியமில்லை என முன்கூட்டியே உரிய தரப்பினருக்குத் தெரியப்படுத்தியிருந்தேன்.
ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சட்டவிரோத தாக்குதல்களை அடுத்து மோதல்கள் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளடங்கலாக சகல வெளிநாட்டவர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று அவர்கள் மீண்டும் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கு விரும்பும் பட்சத்தில், அதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
ஈரான் போர்க்கப்பல்கள் மற்றும் அமெரிக்க போர் விமானங்களை அனுமதிப்பதற்கு இலங்கை மறுப்பு தெரிவித்தமை குறித்த நிலைப்பாடு என்ன?
ஈரானுக்குச் சொந்தமான கப்பல்களைப் போன்று அமெரிக்க போர் விமானங்களை இலங்கையில் தரையிறக்குவதற்கு அனுமதி கோரப்பட்டமை குறித்து ஜனாதிபதி கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் மூலமே அறிந்துகொண்டோம். இவ்விவகாரங்களில் நடுநிலை வகிக்கும் நாடுகளாக இருந்தாலும், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் அவற்றுக்கென சில கடப்பாடுகள் உண்டு. போர் முனைக்கு அப்பால் ஆபத்தில் உள்ள பிற நாடுகளின் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட கப்பல்களுக்கான பாதுகாப்பு மற்றும் தரித்து நிற்பதற்கான வசதிகளை வழங்கவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
இருப்பினும் அமெரிக்கத் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ஐரிஸ் டெனா கப்பலில் இருந்தும், அத்தாக்குதலின் பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட ஐரிஸ் புஷேர் கப்பலில் இருந்தும் மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு அவசியமான வசதிகள் இலங்கையினால் வழங்கப்பட்டமையை நாம் பெரிதும் வரவேற்கிறோம்.





