ஐ.நா. அமைதிப்படை விவகாரங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கலந்துரையாடல்
சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க, களப்பணிகளில் படையினரின் தொழில்முறை நடத்தையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல், சமாதான கட்டமைப்பு மற்றும் சமாதான நடவடிக்கைகள் துறைக்கு பொறுப்பான உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரியுடன் பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தினார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிக் குழுவினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து படையினரை அனுப்புவதற்கான முன்பதிவுத் திட்டங்கள் குறித்து ஐ.நா. அதிகாரிகளுக்கு இலங்கைத் தரப்பால் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.
குறிப்பாக, அமைதிப்படை பணிகளுக்குத் தெரிவு செய்யப்படும் அனைத்து பணியாளர்களும் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் முறையான மற்றும் கட்டமைக்கப்பட்ட பயிற்சிகளைப் பெறுவார்கள் என்பது இங்கு வலியுறுத்தப்பட்டது.
சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க, களப்பணிகளில் படையினரின் தொழில்முறை நடத்தையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அமைதிப்படை நடவடிக்கைகளின் போது தரநிலைகளை மீறுவோருக்கு எதிரான கடுமையான விளைவுகள் குறித்து தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்படும் என்றும், குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வலுவான பொறுப்புக்கூறல் முறைமை அமல்படுத்தப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டினார். இத்தகைய விசாரணை நடைமுறைகளில் தேசிய விசாரணை அதிகாரியின் முக்கியத்துவமும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.





