நாமலின் பிணைக்கு இடைக்கால தடை உத்தரவு
பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்குமாறும் உத்தரவிட்டார்.
கிரிஷ் நிறுவனத்துடனான இலஞ்ச கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு தடை விதித்து, கொழும்பு மேல் 18-11-2026 அன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவுக்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவில் குறையுள்ளதாக தெரிவித்து, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த சீறாய்வு மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லால் பண்டார இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பிணை உத்தரவை இடைநிறுத்தி இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு இது தொடர்பில் அறிவித்தல் விடுக்குமாறும் உத்தரவிட்டார். இதற்கமைய, பிரதிவாதிகள் தரப்பு ஆட்சேபனைகளை டிசம்பர் 8 ஆம் திகதியும், மனுதாரர் தரப்பின் பதில் ஆட்சேபனைகளை ஜனவரி 18 ஆம் திகதியும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதற்கமைய மேற்படி மன மீதான விசாரணை பெப்ரவரி 5 ஆம் திகதி அழைக்கப்படவுள்ளது.
கிரிஷ் நிறுவனத்துடன் 70 மில்லியன் ரூபா இலஞ்ச கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய, கடந்த 3 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறித்த பிணை உத்தரவை இரத்து செய்து, அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் மேற்படி சீறாய்வு மனு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





