மெல்பேர்னுக்கு மேலும் மூன்று விமானச் சேவைகளை இணைக்கும் - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
14-11-2026அன்று முதல் மெல்பேர்ன் நகருக்கு வாராந்தம் மூன்று மேலதிக விமானச் சேவைகளை இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பயணத் தேவை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, 14-11-2026அன்று முதல் மெல்பேர்ன் நகருக்கு வாராந்தம் மூன்று மேலதிக விமானச் சேவைகளை இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் அவுஸ்திரேலியாவுக்கான மொத்த வாராந்த விமானச் சேவைகள் 14 ஆக அதிகரிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்திற்கு தற்போது இயக்கப்படும் நாளாந்த விமானச் சேவைகளுக்கு மேலதிகமாக, செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்தப் புதிய சேவைகள் இயக்கப்படும். அதன்படி, UL608 இலக்க விமானம் பிற்பகல் 2.15 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு மெல்பேர்னை சென்றடையும். மறுமார்க்கமாக UL609 இலக்க விமானம் காலை 7.10 மணிக்கு மெல்பேர்ணிலிருந்து புறப்பட்டு நண்பகல் 12.10 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
அத்துடன், வழமையான நாளாந்த மெல்பேர்ன் விமானச் சேவைகளும் எவ்வித மாற்றமுமின்றித் தொடர்ந்தும் இயக்கப்படும். இதற்கமைய, UL604 இலக்க விமானம் அதிகாலை 12.35 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்டு மாலை 4.00 மணிக்கு மெல்பேர்னைச் சென்றடையும். மறுமார்க்கமாக UL605 இலக்க விமானம் மாலை 5.30 மணிக்கு மெல்பேர்ணிலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு கொழும்பை வந்தடையும்.
சுற்றுலா பயணிகள் மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கைப் புலம்பெயர் சமூகத்தினரின் வருகை காரணமாக, இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாச் சந்தைகளில் அவுஸ்திரேலியா மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாலேயே இந்த சேவை விஸ்தரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக, கொழும்பு ஊடாக லண்டன், சென்னை, டெல்லி மற்றும் மாலே ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் பயணிகளுக்குக் குறைந்த நேர இடைத்தங்கல் (Transit) வசதி கிடைப்பதுடன், விமான நிறுவனங்கள் ஊடாக அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் ஏனைய நகரங்களுக்கான இணைப்புகளும் மேம்படுத்தப்படும்.
இந்த அதிகரித்த சேவைகள் மூலம் சரக்குப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கும் மேம்பட்ட கொள்ளளவு மற்றும் விரைவான இணைப்புகள் கிடைக்கும். குறிப்பாக மெல்பேர்ணிலிருந்து கொழும்பு ஊடாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படும் சரக்குகளுக்கு இது பெரிதும் பயனளிக்கும். இந்த விஸ்தரிப்புடன், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அவுஸ்திரேலியாவிற்கு வாராந்தம் 14 விமானச் சேவைகளை இயக்கும்; இதில் மெல்பேர்ணுக்கு 10 சேவைகளும் சிட்னிக்கு 4 சேவைகளும் அடங்கும்.





