ஊழலை கட்டுப்படுத்த ரூ.500, ரூ.2,000 நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமை ஒழிப்புக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழலை கட்டுப்படுத்தவும் டிஜிட்டல் நாணயப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும் ரூ.500, ரூ.2,000 போன்ற உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கும் வறுமை ஒழிப்புக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிர்வாகம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஊழல் நீடிப்பதற்கு காரணமாக உள்ள நிர்வாக அமைப்புகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், பணத்தை மையமாகக் கொண்ட அரசியலைக் குறைக்கத் தேர்தல் சீர்திருத்தங்கள் தேவை என்றார். தேர்தல்களில் பணத்தை விநியோகிப்பதற்குப் பதிலாக மக்களுக்குச் சேவை செய்வதற்கே அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டிய நாயுடு, இதன் மூலம் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்றார். ஊழலை ஒழித்து வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு டிஜிட்டல் நாணயப் பயன்பாட்டையும் நிர்வாக அமைப்புகளில் அடிப்படை மாற்றங்களையும் நீண்ட காலமாக தான் வலியுறுத்தி வருவதாகவும் அவர் மீண்டும் தெரிவித்தார்.





