நீதிமன்றங்களின் சுதந்திரத்திற்கு மரண அடி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது நம்பிக்கையில்லாப் பிரேரணையை குரோத எண்ணத்துடன் கொண்டுவரவில்லை.
வளமான நாடொன்றையும், அழகான வாழ்க்கையொன்றையும்’ உருவாக்குவது எவ்வாறு போனாலும், சர்வாதிகார ஏகாதிபத்ததிய ஆட்சியே நாட்டில் ஸ்தாபிக்கப்படுகின்றது. அதேநேரம் அரசாங்கம் நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதானது ஜனநாயகத்திற்கும் நீதிமன்றங்களின் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சித்தகல்லென் ராஜமகா விகாரையில் 09-08-2026அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் தற்சமயம் பாரதூரமான அவதான நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் 30 முதல் 40 சதவீதமான மக்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதால் பொருளாதார வளர்ச்சி சரியாக நடைபெறவில்லை. பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் மக்கள் பெரும் அழுத்தங்களுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி அநாதரவான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 'வளமான நாடு, அழகான வாழ்க்கை' என்ற வாக்குறுதியை அரசாங்கம் முன்வைத்த போதிலும், தற்சமயம் அந்த வாக்குறுதிகளுக்கு பதிலாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பணியாக மாறியுள்ளது
நாட்டில் நீதிமன்றங்களின் சுதந்திரத்தை வலுப்படுத்துவதுடன், ஜனநாயகம், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கம் நீதிபதிகளின் ஒய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதானது ஜனநாயகத்திற்கும் நீதிமன்றங்களின் சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட மரண அடியாகும். அது நீதி நிர்வாக பொறிமுறையைச் சிதைத்துச் சட்டத்தின் ஆட்சியைத் தகர்த்தெறியும் செயலாகும்
வெற்றிக்குப் பதிலாகத் தோல்வியும், மக்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குவதற்குப் பதிலாகத் துயரமான வாழ்க்கையுமே உருவாக்கப்பட்டு வருகின்றது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றியமைக்கும் பணியே நடந்த வருகின்றது. மின்சாரக் கட்டணைத்தை 33 ஆல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபாடில்லை. தற்போதும் கூட மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை உண்மையான மகிழ்ச்சியுடன் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது. வளமான நாடொன்றையும், அழகான வாழ்க்கையொன்றையும்’ உருவாக்குவது எவ்வாறு போனாலும், சர்வாதிகார ஏகாதிபத்ததிய ஆட்சியே நாட்டில் ஸ்தாபிக்கப்படுகிறது. நீதிமன்றங்களின் சுதந்திரத்திற்கு பலத்த அடி விழுந்து, நாட்டில் சர்வாதிகார மற்றும் தனிக் கட்சி ஆட்சி ஸ்தாபிக்கப்படுவதால் ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் பணியில் மூழ்கியிருக்கும் அரசாங்கத்தால் நாட்டில் ஏற்பட்டு ஏற்பட்டுள்ள சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாமல் இருக்கிறது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் பாரியதொரு சம்பவம் இடம்பெற்ற சமயத்தில், எதிர்க்கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து அமைச்சர் அதை வென்றார். அதனைத் தொடர்ந்து மஹர, வெலிக்கடை, குருவிட்ட, பல்லன்சேனை போன்ற சிறைச்சாலைகளிலும் கூட இதுபோன்ற பிரச்சினைகள் எழுந்துள்ளதால், தற்போது இந்த அரசாங்கத்தால் ஆடைகளை அணிந்துகொண்டு வீதியில் கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது நம்பிக்கையில்லாப் பிரேரணையை குரோத எண்ணத்துடன் கொண்டுவரவில்லை. சிறைச்சாலை அமைப்பில் உள்ள பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காகவே அதனைக் கொண்டுவந்தோம். இந்தப் பிரச்சினை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இது நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த முறைமையை மாற்றி, நிலவும் அல்லது காலாகாலமாக இருந்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்ற வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதி பதவியிலும் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இன்று இந்த முறைமையில் எந்த மாற்றமும் நடக்கவிக்கலை.
அரசாங்கத்தின் நல்ல செயல்களை நல்லதெனக் கூறுவதைப் போலவே, தவறான செயல்களை எதிர்க்கட்சி எதிர்க்கும். நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் உள்ள நிலையில் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது ஒரு தவறான செயற்பாடாகும். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி முறைமையை மாற்றுவோம் என்றே ஆட்சிக்கு வந்தது, ஆனால் தற்போது இவர்களுக்கு ஜனாதிபதி முறைமையை மாற்ற வேண்டிய அவசியமில்லை போல் செயற்பட்டு வருகின்றனர். தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் இந்த நடவடிக்கைகள் ஊடாக நீதித்துறை மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. நீதிபதிகளின் நற்பெயருக்கும் இதனால் களங்கம் விளைவிக்கப்பட்டுள்ளது என்றார்.





