இலங்கை - ஜப்பான் இடையிலான உறவு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது அமைச்சர் நளிந்த
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது ஜப்பான் அனுப்பிய அவசர மருத்துவக் குழுக்களின் சேவையும், வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் ஜப்பானின் தாராள மனப்பான்மைக்கும் தளராத நட்பிற்கும் சான்றாகும்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு, கலாசாரம், கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த ஒத்துழைப்பு நிலவி வருகிறது. அதற்கமைய அண்மையில் ஜனாதிபதி மேற்கொண்ட ஜப்பான் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜப்பான் பேரரசர் நருஹித்தோவின் 66 ஆவது பிறந்த தினம் மற்றும் ஜப்பானின் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற விசேட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக ஜப்பான் பேரரசருக்கு தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த அமைச்சர், அண்மையில் ஜப்பானில் இடம்பெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்ற பிரதமர் சானே தகா இச்சி மற்றும் லிபரல் ஜனநாயகக் கட்சிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த நிகழ்வின் ஊடாக அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையும் ஜப்பானும் பொதுவான விழுமியங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நீண்டகால நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. இரு நாடுகளிலும் தற்போது நிலவும் பலமான அரசியல் தலைமைத்துவம், ஆக்கபூர்வமான அரசியல் கலாசாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை, ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு ஜப்பான் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நாம் பெரிதும் மதிக்கிறோம்.
குறிப்பாக, அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின் போது ஜப்பான் அனுப்பிய அவசர மருத்துவக் குழுக்களின் சேவையும், வழங்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியும் ஜப்பானின் தாராள மனப்பான்மைக்கும் தளராத நட்பிற்கும் சான்றாகும்.
அண்மையில் ஜனாதிபதி மேற்கொண்ட ஜப்பான் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளதோடு, ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 1972 ஆம் ஆண்டு 'நொரிடேக்' கூட்டாண்மையுடன் ஆரம்பமான ஜப்பானிய முதலீடுகள், இன்று 70 க்கும் மேற்பட்ட பாரிய முதலீட்டுத் திட்டங்களாக விரிவடைந்துள்ளன.
இலங்கைக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வழங்கும் நாடுகளில் ஜப்பான் முதன்மை வகிக்கிறது. பாதுகாப்பு மற்றும் கல்வித் துறைகளிலும் இந்த உறவு பலமாக உள்ளது என்றார். இதேவேளை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசொமாடா மற்றும் தூதரக அதிகாரிகள் இரு நாட்டு உறவுகளைப் புதிய பரிமாணத்திற்குக் கொண்டு செல்ல காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது எனவும் இந்நிகழ்வின் போது தெரிவித்தார்.





