புதிய பயங்கரவாத சட்ட வரைவை மீளப் பெறுமாறு கோரி போராட்டம்
நிரந்தர நியமனங்களை வழங்குமாறு ஆசிரியர் அபிவிருத்தி சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை மீளப் பெறுமாறு வலியுறுத்தியும் நேற்று நீதி அமைச்சுக்கு முன்பாகச் சமூக நீதிக்கான செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
தற்போதைய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தப்பட்ட புதிய பயங்கரவாத தடுப்பு சட்டமூலம் மக்கள் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டமூலமானது ஏற்கனவே இருந்த பயங்கரவாத தடுப்பு சட்டத்தைப் பார்க்கிலும் கடுமையான சட்ட வரையறைகளைக் கொண்டுள்ளது. அத்தோடு இந்தச் சட்டம் அமலுக்கு வருமாயின் தனிமனித உரிமைகளும் இல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளதாகத் தெரிவித்து ஒன்றிணைந்த சமூக நீதிக்கான சங்கத்தினர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நீதி அமைச்சுக்கு முன்னால் 30-01-2026 அன்று மணியளவில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், என்.பி.பி அரசே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று", "80களில் அமல்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தை மறந்துவிட்டீர்களா?", "பயங்கரவாத தடை சட்டத்தை மீளப் பெறு", "பயங்கரவாத தடை சட்டம் வேண்டாம்", "பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் சட்டம் தேவையில்லை" உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை, இந்த கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், தற்போதைய அரசாங்கத்தால் திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் பொதுமக்கள் கருத்துக்காக முன்வைக்கப்பட்டுள்ளது. மக்களைப் பாதுகாப்பதற்கே சட்டங்கள் அவசியமே தவிர, பொதுமக்களை ஒடுக்குவதற்காக அல்ல. ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டத்தை விடவும், இச்சட்டமூலம் கடுமையான சட்ட வரையறைகளைக் கொண்டுள்ளது. இச்சட்டம் அமலுக்கு வருமாயின் இராணுவ ஆட்சியே இடம்பெறும்.
பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் எவரையேனும் கைது செய்வதற்கும், தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்குமான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் எந்தவொரு இடத்தையும், குழுவினரையும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தக்கூடிய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்துக்கமைய இந்நாட்டு மக்கள் மாத்திரமல்லாது வெளிநாட்டவர்கள் கூட அரசாங்கத்தைப் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க முடியாது.
எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மட்டுமல்லாது மனித அடிப்படை உரிமைகளையும் மீறும் வகையில் சட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்குப் பின்னர் பல வருடங்களாக வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் விடுதலையைக் கோரிப் போராடி வருகின்றனர். அவர்களுக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் அரசியல் விடுதலை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், மின் கட்டணத்தைக் குறைத்தல் உள்ளிட்டவற்றை முக்கிய வாக்குறுதிகளாக வழங்கிய போதிலும் அவற்றை நிறைவேற்றத் தவறியுள்ளது.
இதனால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளதுடன், அரசாங்கமும் மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. நிரந்தர நியமனங்களை வழங்குமாறு ஆசிரியர் அபிவிருத்தி சங்கத்தினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவ்வாறான போராட்டங்களை ஒழிப்பதற்கும் அடக்குமுறையைக் கொண்டுவருவதற்கே அரசாங்கம் முயற்சித்து வருகிறது. மனித உரிமைகள் மீறப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையால் அரசாங்கம் இந்த திருத்தப்பட்ட சட்டத்தை மீளப் பெறுமாறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரிக்கை விடுகிறோம்"என்றார்.





