ஹெகலிய உள்ளிட்டவர்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறியுள்ளனர் - உயர் நீதிமன்றம் தீர்மானம்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது சொந்தப் பணத்திலிருந்து 75 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் வழக்குத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளுக்கு முரணான வகையில் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் 27-03-2026அன்று தீர்மானித்தது.
இதற்கமைய முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது சொந்தப் பணத்திலிருந்து 75 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் வழக்குத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக, சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த 50 மில்லியன் ரூபாவையும், தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எஸ்.டி. ஜயரத்ன 50 மில்லியன் ரூபாவையும் இழப்பீடாக அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர மற்றும் மருத்து விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் அரம்பேகெதர துசித சுதர்சன ஆகியோர் இணைந்து மேலும் 50 மில்லியன் ரூபாவை இழப்பீடாக அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.





