வைத்தியர்கள் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு - சுகாதார சேவை மீண்டும் ஸ்தம்பிதம்
தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வேதனையுடன் வீடு திரும்பினர்.
வைத்தியர்களின் இடமாற்றங்கள் மற்றும் பயிற்ச்சியின் பின்னர் வைத்தியர்களுக்கான நியமனங்களை அரசியல்மயப்படுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் 09-04-2026 அன்று காலை 8 மணி முதல் 48 மணித்தியாலம் நாடளாவிய ரீதியிலான பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் பொதுச் சுகாதார கட்டமைப்பு பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சிற்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட நிபந்தனைகளை மீறி, தன்னிச்சையான முறையில் வறையருக்கப்பட்ட வைத்திய பயிற்ச்சிநெறியின் பின்னர் வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியலை வெளியிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களின் இடமாற்ற நடைமுறையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் கூறி கடந்த வாரமும் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் தலையீட்டில் சுகாதார அமைச்சருக்கும் வைத்திய சங்கத்திற்கும் இடையில் நேற்று (9) விசேட பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முடியும் வரை குறித்த நியமனப் பட்டியலை இடைநிறுத்தி வைப்பதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.
இருப்பினும், சுகாதார அமைச்சர் நாட்டில் இல்லாத ஒரு சூழலில், அந்த இணக்கப்பாட்டை மீறி 436 புதிய வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியலை சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் மாலை வெளியிட்டது. இந்நிலையில் சுகாதார அமைச்சு அளித்த வாக்குறுதியை சாடியுள்ள GMOA, இந்தத் தன்னிச்சையான பட்டியலை மீளப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினர் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் முற்றிலும் அநியாயமானது எனத் தெரிவித்தார்.
நியமனப் பட்டியலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நீதிமன்றத்தை நாடுவதே சிறந்தது என்றும், போராட்டத்தைக் கைவிடாமையாலட , வழங்கப்படவிருந்த பேச்சுவார்த்தைக்கான சந்தர்ப்பத்தை வழங்கப்போவதில்லை என்றும் அவர் எச்சரித்தார். புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர்கள் எவ்வித அச்சமும் இன்றி கடமைக்குச் சமூகமளிக்கலாம் என்றும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
வைத்தியர்களின் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகள் மற்றும் மாதாந்த சிகிச்சை சேவைகள் என்பன முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தூர பிரதேசங்களில் இருந்து சிகிச்சைக்கு வந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் வேதனையுடன் வீடு திரும்பினர்.
நாங்கள் அதிகாலை 4 மணிக்கே சிகிச்சைக்கு வந்தோம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்துகளைக் கூட வாங்க முடியவில்லை. வைத்தியர்களும் அரசாங்கமும் தங்களுக்குள் சண்டையிட்டு எங்களைப் போன்ற ஏழை மக்களைப் பலிகடா ஆக்குகிறார்கள் என தமது விசனத்தை நோயாளர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.





