இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளுக்கு இந்திய உயர் ஸ்தானிகரகம் மறுப்பு
மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இந்திய பிரஜைகளால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸதானிகரகம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம்.
மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்த சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
இவ்வாறான விவகாரங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பினை பேணிவருகின்றோம் என உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





