கௌரவத்தை சீர்குலைக்கும் அதிகாரிகளுக்கு பொலிஸில் இடமில்லை: பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய
அதிகாரிகளின் நலன்புரி விடயங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட குறைகளைக் கேட்டறிவதற்காக விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொலிஸின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக எவ்வித தபாரபட்சமின்றி சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், பொலிஸினுள் ஒழுக்கத்தை உறுதிப்படுத்தாமல் பொதுமக்களுக்கு முன்சென்று சட்டத்தை நிலைநாட்ட முடியாது எனவும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இவ்விடயம்தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸ் அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இருமடங்கு வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய வினைத்திறனான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பொலிஸாருக்குத் தேவையான மேலதிக வசதிகளை வழங்க முன்வந்துள்ளதுடன், அதிகாரிகளின் பணித்திறனை மேலும் உயர்த்துவதற்கும் திட்டமிட்டுள்ளது.
எனினும், குற்றவாளிகளுடனும் பாதாள உலகக் கும்பல்களுடனும் தொடர்புகளைப் பேணி, பொலிஸ் சேவையில் இருந்துகொண்டு பொலிஸின் கௌரவத்தை சீர்குலைக்கும் ஒரு சில அதிகாரிகள் தொடர்பாகக் கடும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 99 சதவீதமான அதிகாரிகள் மிகச் சிறப்பாகவும் நேர்மையாகவும் கடமையாற்றும் நிலையில், எஞ்சிய சிலரின் தவறான நடத்தையினால் ஒட்டுமொத்த பொலிஸ் கட்டமைப்பின் நற்பெயரும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறான அதிகாரிகளைச் பணி நீக்குவதற்கும் சட்டத்தின் முன் நிறுத்த தயங்கப்போவதில்லை.
அதிகாரிகளின் நலன்புரி விடயங்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் தனிப்பட்ட குறைகளைக் கேட்டறிவதற்காக விசேட சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இதுவரை 90 சதவீதமான அதிகாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. குறிப்பாக, கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு நிலவும் பற்றாக்குறை மற்றும் இடமாற்றச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அவர்களது கடமைக் காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டு சுழற்சி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இறுதியாக, பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளின் பணித்திறன் தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்படும். பொலிஸார் மனநிறைவுடன் பணியாற்றுவதை உறுதிப்படுத்தினால் மாத்திரமே பொதுமக்களுக்குத் தரமான சேவையை வழங்க முடியும் என்றார்.





