இரகசிய வாக்கெடுப்பு விபரம் சாயணக்கியனுக்கு எப்படித் தெரியும்; முன்னாள் எம்.பி ஜனா கேள்வி
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்று திறந்த வாக்களிப்பு கோரியிருந்தால் அவர்களுக்கு அந்த உண்மை தெரிந்திருக்கும். அதை விடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை, தேவையற்ற விமர்சனங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரசேச சபையின் தவிசாளர் தெரிவின்போது இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்த நிலையில், அவ்வேளையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தது சாணக்கியனுக்கு எவ்வாறு தெரிந்தது என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேசிய அமைப்பாளரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
அந்த ஊடக சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது கட்சி உறுப்பினர்கள் மட்டக்களப்பின் ஏனைய பிரதேச சபைகளின் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவுகளில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் தெரிவு தொடர்பில், இவ்வாறான குற்றச்சாட்டை சாணக்கியனால் எவ்வாறு முன்வைக்கமுடியும்.
மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என்னைப்பற்றி உண்மைக்கு பறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார். 20 உறுப்பினர் கொண்ட மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவில் அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது.
அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது. ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
எனவே இந்த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என்று யாராலும் ஊகிக்க முடியாது. இருந்தபோதும் எமது கட்சி உறுப்பனர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும். அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார். எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
இந்த இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள்வாங்கியது போல தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது. மாவட்டதில் எந்த பிரதேச சபையிலும் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை.
மண்முனைப் பற்று ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார். அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்.
உண்மையில் என்னுடன் பலர் பேசினார்கள் சாணக்கியன் என்னைத் தேடி வந்து பேசினார். இவ்வளவு நாளும் வரவில்லை. இப்போதுதானா வருகின்றீர்கள் என்று அவரிடம் கேட்டேன். என்ன முகத்துடன் உங்களிடம் வருவது என்று கேட்டார். அப்படியானால் எனக்கு எதிராக ஏதோ செய்திருக்கின்றார் என்ற காரணத்தினால் தான் அந்தக் கேள்வியை அவர் கேட்டிருக்கின்றார்.
அப்படியிருந்தும் அவருக்கு எங்களது உறுப்பினர் அவர்களுக்கு எதிராக வாக்களிப்பார் என்று கூறவில்லை. தற்போது தவிசாளராக தெரிவாகியிருக்கின்ற வினோராஜ் என்னை வந்து சந்தித்தார். அவரிடமும் எதிராக வாக்களிப்பதாகச் சொல்லவில்லை.
வியாழக்கிழமை காலையில் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர், பிரதி மேயர், இரண்டு வருடத்துக்குப் பின்னர் மேயராக வரவுள்ளவர்கள் தேடி வந்து பேசினார்கள். இறுதி நேரத்தில் சுமந்திரன் தொலைபேசியிலே பேசினார். ஆனால் அவர்களிடம் நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அவர்கள் எந்தக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கவில்லை.
எந்தவொரு சபையிலும் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு முன்வரவில்லை. முஸ்லிம் காங்கிர ஸு டன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். டக்ளஸ் தேவானந்தாவைத் தேடிச் சென்று ஆதரவு கேட்கிறார்கள். விக்னேஸ்வரனை மிகக் கேவலமாகத் தூற்றியவர்கள் அவருடன் ஒப்பந்தம் செய்கிறார்கள். சஜித் பிரேமதாசாவுடன் ஒப்பந்தம் செய்கிறார்கள்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் 106 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும் எங்களுடன் எந்தவிதமான உடன்பாட்டுக்கும் வருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. ஆனால், நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கக்கூடிய இடங்களில் வாக்களித்துக் கொண்டுவருகின்றோம்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்று திறந்த வாக்களிப்பு கோரியிருந்தால் அவர்களுக்கு அந்த உண்மை தெரிந்திருக்கும். அதை விடுத்து தேவையற்ற குற்றச்சாட்டுகளை, தேவையற்ற விமர்சனங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இறால் தன் தலைக்குள் எதையோ வைத்துக் கொண்டு நாறுது, மணக்குது என்று கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை, தங்களுடைய கட்சிப்பிரச்சினைகளை இப்போது நீதிமன்றம் வரை கொண்டு சென்றுவிட்டு என்னை என்னுடைய கட்சியிலிருந்து இடைநிறுத்த வேண்டுமென்று சவால் விடுவதற்கு நீங்கள் யார். உங்களுக்கென்ன அருகதையிருக்கிறது என்றார்.





