பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு தள்ளப்பட்டுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர்
விவசாயிகளுக்கான உரங்களுக்கும் எதிர்காலத்தில் கியூ.ஆர். குறியீடு வரும் அபாயம் உள்ளதாக அவர் அச்சம் வெளியிட்டார்.
அரசாங்கத்தின் முறையற்ற மற்றும் திட்டமிடல் இல்லாத நடவடிக்கைகளால் நாடு மீண்டும் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கேகாலை தேர்தல் தொகுதி அலுவலகத் திறப்பு விழாவில் 15-03-2026 அன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தற்போது பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், மீண்டும் எரிபொருளுக்காக ஞசு குறியீடு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் எரிபொருள் நுகர்வு கட்டாயமாக கட்டுப்படுத்தப்படுவதால், மக்களின் அதிருப்தி அதிகரித்து மேலும் பல பொருளாதாரச் சிக்கல்கள் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவது குறித்தும், ரஷ்யாவுடனான எரிபொருள் கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் தாம் பாராளுமன்றத்தில் முன்னரே எச்சரித்த போது, ஆளும் தரப்பினர் அதனை ஏளனம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால், 12 நாட்கள் கூட கடக்காத நிலையில் அரசாங்கம் அதே கியூ.ஆர். முறைமையை நடைமுறைப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திடம் எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கான எந்தவொரு மூலோபாய திட்டமிடலும் இல்லை என விமர்சித்த சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான இந்த ஆட்சி எவ்வித முன்னாயத்தமும் இன்றி இங்கும் அங்கும் அலைந்து திரிந்து நாட்டை நடத்துவதாகக் கூறினார். சர்வதேச நன்கொடையாளர் மாநாடு மற்றும் சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாடுகளில் திருத்தங்கள் போன்ற விடயங்களில் அரசாங்கம் காட்டும் அலட்சியம் நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
மேலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் மின் உற்பத்தி 135 மெகாவோட்டால் குறைந்துள்ளதாகவும், இதன் சுமையை இறுதியில் மின்சாரப் பயனாளர்களே சுமக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கான உரங்களுக்கும் எதிர்காலத்தில் கியூ.ஆர். குறியீடு வரும் அபாயம் உள்ளதாக அவர் அச்சம் வெளியிட்டார்.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சி முன்வைத்த மாதவிடாய் வறுமை ஒழிப்பு போன்ற ஆக்கபூர்வமான கருத்துக்களைச் சமூக வலைதளங்கள் மூலம் கேலி செய்தவர்கள், இன்று அதே உண்மைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுவதாக அவர் சாடினார். அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும், மக்களின் உன்னத கடமையை ஆற்ற ஐக்கிய மக்கள் கூட்டணி எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.





