மக்கள் பிரச்சினைகளைப் பேச அரசாங்கத்திற்குள் எவருக்கும் தைரியமில்லை - பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தொகைகள் போதுமானவையல்ல என்பதை அங்கு நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்தேன்.
தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களது அச்சத்தால் மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமலுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 01-07-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அனர்த்த முகாமைத்துவம் குறித்த அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் நான் கலந்துகொண்டது எந்தவொரு அரசியல் நோக்கத்துக்காகவும் அல்ல. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பீட்டுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கே ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தொகைகள் போதுமானவையல்ல என்பதை அங்கு நான் ஜனாதிபதியிடம் நேரடியாகவே தெரிவித்தேன்.
நாட்டின் தலைவர்கள் யாராக இருந்தாலும், மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் தேவைகளுக்காகவும் குரல் கொடுக்கவே மக்கள் எங்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளனர். கடந்த காலத்தில் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று மார்தட்டிய 'வியத்மக' அறிஞர்களுக்கு என்ன நேர்ந்ததோ, அதுதான் இன்று தங்களை 'நடமாடும் நூலகங்கள்' என்று கூறிக்கொள்ளும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நடக்கப் போகிறது.
நியூட்டனின் விதிப்படி மேலே சென்றால் கீழே விழுந்துதான் ஆக வேண்டும். தற்போதைய அரசாங்கம் எரிபொருள் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ளதாகக் கூறுகிறது. ஆனால், இதனால் பேருந்து அல்லது முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் எதுவும் குறையவில்லை. எனவே, ஊடகங்கள் வீணான வதந்திகளைத் தவிர்த்து, மக்களின் உண்மையான எரியும் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்.
நாட்டை முழுமையாக நாசமாக்கி, அதன் மீது அரசியல் செய்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. நாட்டின் நன்மைக்காக எப்போதுமே தனது ஆதரவு இருக்கும் என்றார்.





