சாமர சம்பத் எம்.பிக்கு வழக்கு நவ.3இல் மீண்டும் விசாரணைக்கு
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சாமர சம்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள், சாமர சம்பத்துக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினர். இதனை கருத்திற் கொண்ட நீதிவான் வழக்கின் அடுத்த விசாரணைத் திகதியான நவம்பர் 03 ஆம் திகதியன்று, விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான நிலையான வைப்புத் தொகைகளை முதிர்ச்சியடைவதற்கு முன்னரே சட்டவிரோதமான முறையில் திரும்பப் பெற்றதன் மூலம், அரசாங்கத்திற்கு 17.3 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நட்;டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





