சுதந்திர ஊடக செயற்பாடுகளை அடக்குவதற்கு அரசாங்கம் முயற்சி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
இந்த நிலைமைகளை பார்க்கும்போது நாட்டை ஆளுவது வினைத்திறனற்ற அரசாங்கமே என்பது வெளிப்படுகின்றது.
அரசாங்கத்தின் பட்டய ஊடக நிறுவனத்தை தாபிப்பதற்கான சட்ட மூலம் சுதந்திர ஊடக செயற்பாடுகளை அரசாங்கத்தின் அடக்குமுறைக்குட்படுத்தும் வகையிலே கொண்டுவந்துள்ளது.அதனால் தற்போது அரசாங்கம் செல்லும் பாதை சரியானதா பிழையானதா என்பதை பரிசீலித்துப் பார்ப்பதற்கு முடியுமானால் மாகாண சபை தேர்தல் நடத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-06-2026 அன்று இடம்பெற்ற வலுசக்தி மற்றும் வாழ்க்கைச்செலவு தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கம் இலங்கை உயர் தொழில்துறை பட்டய ஊடக நிறுவனத்தை தாபிப்பதற்கான சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை பார்க்கும்போது ஊடகத் துறையை தொழில்முறைப்படுத்துகிறோம் எனக் கூறிக் கொண்டு, சுதந்திர ஊடக நடவடிக்கைகளை அரச கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்து வருகின்றது. ஊடகங்களை கட்டுப்படுத்த அமைச்சருக்கு ஒரு இடைக்கால நிர்வாக சபையை நியமித்துக் கொள்வதற்கும், அதில் பதவி வழி அடிப்படையில் அமைச்சின் செயலாளர் உறுப்பினராக ஆகுவதற்கும் முடியும். சுதந்திர ஊடகங்களை அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரும் விதமாகவே இந்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டடிருக்கிறது.
ஊடகவியலாளர்களாக செயல்படும்போது அடையாள அட்டை கட்டாயமென்று இங்கு நேரடியாக குறிப்பிடவில்லை என்றாலும், யார் ஊடகவியலாளராக செயல்பட முடியும் என்பதை தீர்மானிக்கும் விடயத்தில் அரசாங்கம் வாயிற்காவலனாக மாறியுள்ளது. இது பாரதூரமான பிரச்சினையாகும். தொழில்முறை தவறுகளால் உறுப்பினர் அங்கத்துவம் இடைநிறுத்தப்படலாம். இது ஊடக அடக்குமுறையின் ஒரு வடிவமாகும்.
இந்த சட்டத்தின் மூலம் முக்கிய விதிமுறைகள், அங்கத்தவர் தகுதிகளை தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சருக்கும் பேரவைக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் அடிப்படையில் இத்தகைய அதிகாரங்கள் ஆரம்ப சட்ட வகுப்பாக்கத்தில் வரையறுக்கப்பட வேண்டும். பொருள் விளக்கங்கள் அமைந்து காணப்பட வேண்டும்.
இது போன்ற எந்த விடயங்களும் உத்தேச வரைவில் உள்ளக்கடக்கப்படவில்லை. சுய ஒழுங்குமுறைக்குப் பதிலாக, சுதந்திர ஊடகத் துறையில் அரச ஒழுங்குமுறையை கொண்டுவரும் ஒரு அடக்குமுறை நடவடிக்கையை இந்த சட்டத்தின் மூலம் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
அரச தலையீட்டால் வழங்கப்படும் அங்கீகாரம், ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்தும் ஒழுங்குபடுத்தல் அதிகாரங்கள், ஊடகத் தொழிலில் ஈடுபட யாரால் முடியும் என்பதில் அங்கத்துவம் குறித்த தெளிவான உத்தரவாதமின்மை ஆகியவை ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் பெரும் அடியாகும்.
அதேநேரம் இன்று நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், மீனவர்கள், விவசாயிகள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலைமைகளை பார்க்கும்போது நாட்டை ஆளுவது வினைத்திறனற்ற அரசாங்கமே என்பது வெளிப்படுகின்றது.
அதனால் அரசாங்கம் செல்லும் வழி சரியானதா அல்லது பிழையானதா என்பதை பரிசீலித்துப் பார்க்க, லிட்மஸ் பரிசோதனையாக மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்றார்.





