5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு
ஸ்திரமான நிதியியல் வருமான உட்பாய்ச்சல் மற்றும் வெளியக மீண்டெழும் தன்மையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பவற்றுடன் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட அமலாக்கம் வலுவானதாக அமைந்திருக்கின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும், நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே அதற்கு இயக்குனர் சபையின் அனுமதி வழங்கப்படும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் கட்ட மீளாய்வை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த செப்டெம்பர் 24 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர், இக்காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தியதுடன் பெரும்பாகப் பொருளாதார அபிவிருத்திகள், பொருளாதார மற்றும் நிதியியல் கொள்கைகளை அமல்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
இந்நிலையில் தமது அவதானிப்புக்கள் மற்றும் தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் 09-10-2025 அன்று கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எவான் பபஜோர்ஜியோ தெரிவித்த விடயங்கள் வருமாறு:
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. நாணய நிதிய செயற்திட்டத்துக்கு அமைவாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்ட ஒதுக்கீட்டுச்சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படல், பல்தரப்புப் பங்காளர்களின் நிதியியல் பங்களிப்பை உறுதிப்படுத்தக்கூடியவகையில் நிதியியல் உத்தரவாத மீளாய்வு நிறைவுசெய்யப்படல் மற்றும் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் போதியளவு முன்னேற்றம் அடையப்படல் ஆகிய விடயங்களின் அடிப்படையிலேயே இந்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளிக்கும். பணிப்பாளர் சபையின் ஒப்புதலை அடுத்து இலங்கைக்கு 347 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படும். அதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியின் பெறுமதி 2.04 பில்லியன் டொலராக உயர்வடையும்.
அதேவேளை இலங்கையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் வலுவான மறுசீரமைப்பு செயற்திட்டங்கள் மூலம் பாராட்டத்தக்க பெறுபேறுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. 2025 இன் முதல் அரையாண்டில் பொருளாதாரம் 4.8 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்திருப்பதுடன் அவ்வளர்ச்சி இவ்வருடம் முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கின்றோம். அத்தோடு பணவீக்கம் சாதக மட்டத்தை அடைந்திருப்பதுடன் செப்டெம்பரில் விலைகள் 1.5 சதவீதத்தினால் அதிகரித்தன. கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் மொத்த வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 6.1 பில்லியன் டொலராக உயர்வடைந்தது. 2025 இன் முதல் அரையாண்டில் நிதியியல் செயலாற்றம் மிக வலுவானதாக அமைந்ததுடன் மோட்டார் வாகன இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் அதற்கு ஆதரவளித்தன. கடன்மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்தியடையும் தருவாயை எட்டியுள்ளது.
ஸ்திரமான நிதியியல் வருமான உட்பாய்ச்சல் மற்றும் வெளியக மீண்டெழும் தன்மையில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பவற்றுடன் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட அமலாக்கம் வலுவானதாக அமைந்திருக்கின்றது. அதேபோன்று பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அழுத்தங்களிலிருந்து மீண்டெழும் தன்மையை மேலும் விரிவுபடுத்துவதற்கும் தற்போதைய மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து பேணுவது இன்றியமையாததாகும். நிலையற்ற வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பூகோள அரசியல் குழப்பங்களின் விளைவாக பொருளாதாரத்தின் மீதான எதிர்மறைத்தாக்கங்களுக்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் மேற்கூறப்பட்ட விடயங்கள் மிக அவசியமானவையாகும்.
அதேபோன்று 2026 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டமானது நாணய நிதிய செயற்திட்டத்தின் கூறுகளுக்கு ஏற்றவாறு அமையவேண்டும். குறிப்பாக வரி வருமானத்தை அதிகரிப்பதற்கான நிலையான முயற்சிகள், வரி செலுத்துகைத் தளத்தை விரிவுபடுத்தல் மற்றும் வரி ஏய்ப்பை முடிவுறுத்துவதற்கான நடவடிக்கைகள் மூலம் வருமான வலுவிழப்பை உரியவாறு கையாளல் போன்ற விடயங்கள் இதில் உள்வாங்கப்படவேண்டும்.
மேலும் செலவினங்களை ஈடுசெய்யக்கூடியவாறான வலுசக்தி விலையிடல் முறைமை, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிர்வாகத்தை வலுப்படுத்தல், அவற்றின் கடன்நெருக்கடியை சீரமைப்பு நிதியியல் உறுதிப்பாட்டை மேம்படுத்தல் என்பனவும் இன்றியமையாதனவாகும்.





