22ஆவது திருத்தத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதன் நோக்கம் பொதுநலன் சார்ந்த விடயமல்ல என்பதை ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்.
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கை அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விரிவான பேச்சுவார்த்தைகளையே கோரியுள்ளனர். நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளனர் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதிக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் சிறந்த தீர்மானங்களை எட்டக்கூடியதாகவும்,தவறான நிலைப்பாடுகளும் திருத்திக் கொள்ளப்பட்டன.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் தீர்மானத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கொள்கைத் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. விரிவான கலந்துரையாடல்களையே கோரினர். அதற்கு ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டை அறிவித்தார்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீட்டிப்பதன் நோக்கம் பொதுநலன் சார்ந்த விடயமல்ல என்பதை ஜனாதிபதி சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். உண்மை தன்மையை அவர்களும் விளங்கிக் கொண்டார்கள்.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளனர்.அதனால் தான் அவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார்.





