எமது சபைக்கும், கட்சித்தலைமைக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது; முதல்வர் மதிவதனி
அதேநேரம், பொலிஸார் குறித்த சிலையை அகற்றுவோம் என்று எழுத்துமூலமான உறுதிப்பாட்டை கோரிய போதும் அதனை நாங்கள் வலிந்து வழங்குவதற்கு இடமளிக்கவில்லை.
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ்.மாநகர சபையோ அல்லது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கோ தொடர்பில்லை. அச்சிலை அகற்றப்பட்டமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்று யாழ்.மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்தார்.
யாழ்.நல்லூரில் வைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் வகையில் யாழ்.மாநகர சபையின் முதல்வர் 27-09-2026 அன்று யாழ்.மாநாகரசபை வளாகத்தில் நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், 15-09-2026 அன்று எமது மாதாந்த கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உறுப்பினர் மதிசுயானால் தியாக தீபம் திலீபனுக்கு திருவுருச்சிலையை தற்காலிகமாக வைப்பதற்கான கடிதமொன்றின் ஊடாக கோரப்பட்டிருந்தது.
தற்காலிகமாக அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் குறித்த அனுமதி தொடர்பில் எனது கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானத்திடத்தில் அதுகுறித்த ஆலோசனையைக் கேட்டிருந்தேன். அப்போது குறித்த சிலையை தற்காலிகமாக வைப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கும் நிலையில் அதற்கான சபையின் அனுமதியைப் பெற்று அதனை வழங்கலாம் என்று கூறினார். அத்துடன் கொண்டுவந்திருக்கும் சிலையை மீள திருப்பி அனுப்பிவிட வேண்டாம் என்றும் கோரியிருந்தார்.
அதனடிப்படையில் குறித்த அனுமதிக்கோரிக்கையை பிரேரணையாக சபையில் முன்வைத்தபோது குறித்தவொரு கட்சியினர் வெளியேறியிருந்த நிலையில் ஏனைய அனைத்துக் கட்சியினரினதும் ஏகோபித்த ஆதரவில் 26-09-2026அன்று வரையில் அச்சிலையை தற்காலிகமாக வைப்பதற்கான அனுமதி மாநகர சபையால் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த அனுமதி அளிக்கப்பட்ட தினத்திலிருந்து யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் எவ்வாறு திலீபனின் சிலையை வைப்பதற்கு அனுமதி வழங்கினீர்கள் என்று கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருந்தனர்.
அதுதொடர்பில் அவர்கள் எழுத்துமூலமாகவும் கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக சிலை வைப்பதற்கான கோரிக்கை யாரால் முன்வைக்கப்பட்டது. எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது தொடர்பிலான தகவல்களை யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எழுத்துமூலமாக கோரியிருந்தார்.
அதுமட்டுமன்றி குறித்த சிலையை வைத்து நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு அனுமதிகேரியுள்ள தரப்பினரிடமிருந்து 26ஆம் திகதிக்கு பின்னர் அவ்விடத்தில் இருந்து திலீபனின் சிலையை அகற்றுவோம் என்று எழுத்துமூலமான உத்தரவாதத்தை பெற்றுத்தருமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்ததோடு தொடர்ச்சியாக தொலைபேசி வழியாகவும் வலியுறுத்தினர்.
எவ்வாறாயினும், தமிழ் மக்களின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து முருகப்பெருமானின் வீதியில் தன்னை அணுஅணுவாக உயிர்நீத்த திலீபனின் சிலையை வைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர்.
எமது கட்சியின் தலைமையான சி.வி.கே.சிவஞானம் கூட சிலை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்;லை. அவர் சிலையை மீள அனுப்பி விட வேண்டாம் என்றே குறிப்பிட்டார். ஆகவே அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொருத்தமானவை அல்ல.
அதேநேரம், பொலிஸார் குறித்த சிலையை அகற்றுவோம் என்று எழுத்துமூலமான உறுதிப்பாட்டை கோரிய போதும் அதனை நாங்கள் வலிந்து வழங்குவதற்கு இடமளிக்கவில்லை.
ஒரு கட்சியைத்தவிர ஏனைய கட்சிகள் ஏகோபித்து முடிவெடுத்து தீலிபனின் தியாகத்து வலுச்சேர்த்தமை மகிழ்சிக்குரிய விடயமாகும். நானும் கூட நினைவேந்தலில் அஞ்சலிசெலுத்தியிருந்தேன். மாதந்த கூட்டத்தின் போதும் நாங்கள் மாநகர சபைக்குள்ளும் மயூரனின் ஏற்பாட்டில் அஞ்சலித்திருந்தோம்.
திலீபனின் சிலை அகற்றப்பட்டமையை நாங்களும் கண்டிக்கின்றோம். அதற்கு மாநகர சபையோ அல்லது எமது கட்சித்தலைமையே காரணமல்ல என்பதை ஆணித்தனமாக குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.





