கொழும்பு துறைமுக நகரில் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க விசேட நடவடிக்கை அவசியம் - அரசாங்க நிதி பற்றிய குழு
துறைமுக நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கொழும்பு துறைமுக நகரில் சட்டவிரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்கும் நாட்டின் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதற்கும் உரிய ஒழுங்குமுறை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் துறைமுக நகரை அடிப்படையாகக் கொண்டு அண்மையாலமாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கொழும்பு துறைமுக நகரில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரங்கள், எதிர்கால முதலீட்டு திட்டங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் அண்மையில பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுக் கூட்டத்தில், கொழும்புத் துறைமுக நகரப பொருளாதார ஆணைக்குழுவின் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள்,வெளிநாட்டு முதலீடுகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட மற்றும் நிர்வாக விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகங்களாக அண்மையில் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வணிகங்கள் மற்றும் எதிர்கால முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டதுடன், துறைமுக நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டங்களின் தற்போதைய நிலைமை மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
கொழும்பின் பிரதான வர்த்தக வலயத்திற்கு அண்மித்த பகுதியில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், 1.12 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 9 காணித்துண்டுகள் இதுவரை குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 6 காணித்துண்டுகளைக் குத்தகைக்கு விடுவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.





