சட்டமூலங்களை முழுமையாக மீளப்பெறக் கோரி சிவில் அமைப்புகள் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்து
நீதிமன்ற அனுமதியின்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒருவரைத் தடுத்து வைக்கவும், சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வெளியே சந்தேகநபர்களுடன் உடன்பாடுகளைச் செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகின்றது.
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். சட்டமூலங்கள் மீளப்பெறப்படாவிட்டால் பரந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்ததுள்ளனர்.
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் 19-11-2026 அன்று 'அரச பயங்கரவாத சட்டங்களை கிழித்தெறிவோம்!' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்விலேயே இக்கூட்டு பிரகடனம் கைச்சாத்திடப்பட்டது.
மக்கள் போராட்ட இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம், முன்னிலை சோசலிசக் கட்சி, மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பு, ஒருங்கிணைந்த ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் பிரகடனத்தில் கைச்சாத்திட்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் துமிந்த நாகமுவ கூறுகையில், '2022ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி ஊழல், மோசடி ஆகியவற்றுக்கு எதிரானதாக மாத்திரம் இருக்கவில்லை. பொருளாதார நெருக்கடி மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்பட்டமைக்கும் எதிரானதாக இருந்தது. மீண்டும் அவ்வாறான மக்கள் எழுச்சி ஏற்படலாம் என அரசு அஞ்சுகின்றது. மக்கள் ஆதரவை இழப்பதற்கு முன்னர் அத்தகைய போராட்டத்தை அடக்குவதற்கான சட்டங்களைத் தயாரிக்கின்றது. பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் மக்கள் எதிர்ப்பு வலுப்பெற்றதால் அரசாங்கம் தற்காலிகமாகப் பின்வாங்கியுள்ளது. அதனால் எமது போராட்டம் முடிவடையாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் புதிய சட்டமூலத்தையும் முழுமையாக மீளப்பெறும் வரை போராடுவோம்' என்றார்.
சிவில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவிக்கையில், '1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் வடக்கிலும் தெற்கிலும் கடுமையான அடக்குமுறைகளுக்கு வழிவகுத்தது. சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் மூன்றாவது பிரிவும், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டமும் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய சட்டமூலங்களின் ஊடாக நீதிமன்ற அதிகாரங்களுக்கு அப்பால் நிறைவேற்று அதிகாரம் விரிவுபடுத்தப்படுகின்றது. நீதிமன்ற அனுமதியின்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் ஒருவரைத் தடுத்து வைக்கவும், சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு வெளியே சந்தேகநபர்களுடன் உடன்பாடுகளைச் செய்யவும் அதிகாரம் வழங்கப்படுகின்றது.
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஆறு மணித்தியாலங்களுக்குள் உயிரிழந்த சம்பவமும், வெலிக்கடை பொலிஸ் காவலில் நிமேஷ் உயிரிழந்த சம்பவமும் இத்தகைய அதிகாரங்களின் ஆபத்தை உணர்த்துகின்றன. கலைஞர்கள் கருத்து வெளியிட்டமைக்காக வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.
நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான முதலாவது வழக்கில் மேஜர் தொரதெனிய தொடர்புபட்டிருந்தார். யுத்த காலத்தில் சரணடைந்த இளைஞர்கள் காணாமற்போனமையும், பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் அபாயமும் கவனிக்கப்பட வேண்டும். போதைப்பொருள் வழக்கொன்றில் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டவை என மேன்முறையீட்டு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களை முழுமையாக நீக்குவதற்குப் பரந்த போராட்டம் அவசியம்' என்றார்.
மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே கூறுகையில், 'இலங்கை ஒரு கறுப்பு அரசு என ஜனாதிபதியே கூறுகின்றார். அந்த அரச கட்டமைப்பின் கீழ் மக்கள் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளனர். கறுப்பு அரசை ஒழித்து ஜனநாயகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இப்போது அதே அரச கட்டமைப்புக்கு மேலும் அதிகாரம் வழங்க முயல்கின்றது. ஹோமாகமவில் இஷார ஆறு மணித்தியாலங்களுக்குள் உயிரிழந்தார் என்றும், வெலிக்கடையில் நிமேஷ் மூன்று மணித்தியாலங்களுக்குள் உயிரிழந்தார் என்றும் கூறப்படும் நிலையில், 72 மணித்தியாலத் தடுப்பதிகாரம் ஆபத்தானது. அதனை 48 மணித்தியாலங்களாகக் குறைத்தாலும் சட்டத்தின் அடக்குமுறைத் தன்மை மாறாது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் புதிய சட்டமூலத்தையும் முழுமையாக மீளப்பெற வேண்டும். இல்லையெனில் பரந்த மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பிப் போராடுவோம்' என்றார்.





