பெருமளவு காலத்தை சிக்கனப்படுத்தமுடியும் : திறைசேரியின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும
ஒப்பந்தத்தை வழங்குவதற்கு முன்னரான நிலை வரையிலான சகல மதிப்பீட்டு நடைமுறைகளையும் பூர்த்திசெய்யவும் முடியும்.
அரச கொள்முதல் நடைமுறையில் இலங்கை பாரிய மாற்றமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கமைய பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பதாகவே அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் அவற்றின் கொள்முதல் நடைமுறைகளை நிறைவுசெய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக உத்தேச செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான காலப்பகுதியில் சுமார் 6 மாதங்கள் வரை சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசாங்க செயற்திட்டங்களை உரிய நேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு சில காரணிகள் நீண்டகாலமாகத் தடையாக இருந்துவந்த நிலையில், இப்புதிய அணுகுமுறை அவற்றுக்குத் தீர்வாக அமையும் என திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
'நீண்ட கால அவகாசம் தேவைப்படும் கொள்முதல் நடைமுறைகள் காரணமாக ஒரு நிதியாண்டுக்குள் அரச செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரச நிறுவனங்களுக்கு குறைந்தளவு கால அவகாசமே இருந்துவந்தது. இதுவரை காலமும் அமலில் இருந்த நடைமுறையின்கீழ் அரச நிறுவனங்கள் கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே எதிர்வரும் ஆண்டுக்கான கொள்முதல் நடைமுறைகளை அதற்கு முந்தைய ஆண்டிலேயே ஆரம்பிப்பதற்கு அனுமதியளிக்கும் வகையிலான திருத்தப்பட்ட செயன்முறையை அறிமுகப்படுத்துவதை இலக்காகக்கொண்டு திறைசேரி மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு என்பன இணைந்து பணியாற்றியுள்ளன' என ஹர்ஷன சூரியப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி தற்போதைய திருத்தத்துக்கு அமைவாக 2027 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களைப் பொறுப்பேற்றுள்ள நிறுவனங்கள் அவற்றுக்கான கொள்முதல் வாய்ப்புக்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடவும், விலைமனுக்களைக் கோரவும், விண்ணப்பதாரர்களைப் பட்டியலிட்டு தெரிவுசெய்யவும், விலைமனு மதிப்பீட்டுக் குழுக்கள் மற்றும் உயர்மட்டக் கொள்முதல் குழுக்களை நியமிக்கவும், ஒப்பந்தத்தை வழங்குவதற்கு முன்னரான நிலை வரையிலான சகல மதிப்பீட்டு நடைமுறைகளையும் பூர்த்திசெய்யவும் முடியும்.
அதன் நீட்சியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பாராளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனவரி மாதத் தொடக்கத்திலிருந்தே தெரிவுசெய்யப்பட்ட விலைமனுதாரர்களுக்கு ஒப்பந்தக் கடிதங்களை உடனடியாக வழங்கமுடியும்





