நாட்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு: ராஜித்த சேனாரத்ன
இந்திய பாமகோபியாவுடன் அவ்வாறு செய்ய முடியாது. இந்திய மருந்துகளில் நல்ல மருந்துகளும் இருக்கின்றன.
நாட்டில் இன்று பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள சுகாதாரம் தொடர்பான திருட்டு ஒப்பந்தம் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், நாட்டில் 400க்கும் அதிக மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் மயக்கமூட்டும் மருந்துகளுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.அதேநேரம் சுகாதாரம் தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டு்ள்ள திருட்டு ஒப்பந்தம் மிகவும் பயங்கரமானதாகும். இந்த ஒப்பந்தத்தை நாங்கள் கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தியாவின் மருந்து பாமகோபியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரித்தானிய, ஐராேப்பிய மற்றும் ஐக்கிய அமெரிக்க பாமகோபியாவையே நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
ஏனெனில் இந்த நாடுகளின் தரம் குறைந்த மருந்து என ஒன்று இல்லை. அதனால் அச்சமின்றி எங்களுக்கு அந்த நாடுகளின் பாமகோபியாக்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால் இந்திய பாமகோபியாவுடன் அவ்வாறு செய்ய முடியாது. இந்திய மருந்துகளில் நல்ல மருந்துகளும் இருக்கின்றன. தரம் குறைந்த மருந்துகளும் இருக்கின்றன. அதனாலே இந்திய பாமகோபியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்திய பொருட்களை நிராகரித்த, இந்தியாவுக்கு எதிராக போராட்டம் நடத்திய இவர்கள் இன்று இந்தியாவுடன் கீழ்தரமான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது. இந்திய பாமகோபியாவை ஏற்றுக்கொள்வதாகவும் அரசாங்கம் இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது.அடுத்ததாக எமது நாட்டில் இருந்து மருந்து ஏற்றுமதி செய்ய ஐராேப்பிய பாமகோபியாவின் சான்றிதழை நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
மேலுமாெரு மருந்து ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அவுஸ்திரேலியாவின் சான்றிதழை பெற்றுக்கொள்ள காத்திருக்கிறது. ஆனால் நாங்கள் இந்திய பாமகோபியாவுடன் உடன்படிக்கை செய்தால், எமது மருந்து ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அந்த பணியை செய்ய முடியாமல்போகும். இந்தியாவுக்கு மாத்திரமே எங்களுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய முடியுமாகும்.
எதிர்காலத்தில் மருந்து ஏற்றுமதியில் பாரிய போட்டித்தன்மை ஏற்படுவதை தடுக்கவே இந்தியா எங்களுடன் இந்த உடன்படிக்கைக்கு வந்துள்ளது. அதேநேரம் இந்த உடன்படிக்கைக்கு அமைய இலங்கை இறக்குமதி செய்யும் மருந்து பொருட்களும் இந்திய பாமகோபியாவாக இருக்க வேண்டும். அப்படியானால் இந்தியாவில் இருந்து மாத்திரமே எமக்கு மருந்து ஏற்றுமதி செய்ய முடியுமாகும். இது எதிர்காலத்தில் சிறந்த தரம்கூடிய மருந்து பொருட்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படுவதுடன் மருந்து பொருட்கள் தொடர்பில் எந்தவித விலை கட்டுப்பாடும் இல்லாமல்போகும் அபாயம் இருக்கிறது.
மேலும் எமது காலத்தில் நோயாளர்களின் இரத்தப்பரிசோதனை வைத்தியசாலைக்கு வெளியில் பரிசோதனை செய்வதை தடுத்து வந்தோம். நோயாளர்கள் அனைவருக்கும் வைத்தியசாலையிலேயே இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதனால் வைத்தியசாலைகளுக்கு அருகில் இருந்த தனியார் இரத்த பரிசோதனை நிலையங்கள் மூடப்பட்டன.
ஆனால் தற்போது மீண்டும் அவை ஆரம்பிக்கப்பட்டு, இரவு நேரங்களில் அங்கு பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. அரச வைத்தியசாலைகளில் இரத்த பரிசோதனை இடம்பெறுவது மிகவும் குறைவாகும்.
உலக நாடுகளால் பாராட்டப்பட்டும் பல நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் இருந்த எமது சுகாதாரத்துறை, இன்று நாளுக்கு நாள் சீரழிந்து செல்வதை காணக்கூடியதாக இருக்கிறது.அதனால் உலகில் மிகவும் மோசமான சுகாதார சேவை இருக்கும் 40 நாடுகளில் இலங்கையும் உள்வாங்கப்பட்டிருக்கிறது என்றார்.





