இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவுக்குள் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்தவேண்டும் - வெளிவிவகார செயலாளர்
இலங்கையின் தலைமைத்துவத்தின்கீழ் இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அடையப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.
இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவின் உறுப்புநாடுகளுக்கு இடையில் பங்காண்மையை வலுப்படுத்துவதும், கலந்துரையாடல் அடிப்படையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் அவசியம் என இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் தலைமைத்தின்கீழ் 'புத்தாக்கம், வெளிப்படைத்தன்மை, மீளெழுச்சி மற்றும் தகவமைவு' எனும் மகுடத்தில் புதுடில்லியில் நேற்றைய தினம் (15) நடைபெற்ற இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவின் (Indian Ocean Rim Association - IORA) சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 28 ஆவது கூட்டத்துக்கு வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜா தலைமையிலான இலங்கையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் குழு இணைத்தலைமை தாங்கியது.
இக்கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் அருணி ரணராஜா, 2023 - 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் தலைமைத்துவத்தின்கீழ் இந்து சமுத்திர எல்லை நாடுகள் கூட்டிணைவின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அடையப்பட்ட சாதனைகளை எடுத்துரைத்தார்.
அதேபோன்று கடல்சார் பாதுகாப்பு, கடற்பிராந்திய நிர்வாகம், கடற்பிராந்தியத்தை மையப்படுத்திய பொருளாதாரம், நிலைபேறான சூழலைக் கட்டியெழுப்பல், உறுப்புநாடுகளுக்கு இடையிலான பங்காண்மையை வலுப்படுத்தல் மற்றும் கலந்துரையாடல் அடிப்படையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்தல் என்பவற்றின் அவசியம் பற்றியும் அவர் வலியுறுத்தினார்.





