ஸ்பெயினில் விடுப்பில் இருந்த ரொறன்ரோ காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை
மற்ற இரண்டு அதிகாரிகளும் நாடு திரும்பியதும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் ரொறன்ரோ காவல்துறை தெரிவித்ததின்படி, விடுப்பில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் சுற்றுலாவில் இருந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் குற்றச்சாட்டின் முழு விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.
ஒரு அதிகாரி கனடாவுக்கு திரும்பியுள்ளார். அவர் சம்பளத்துடன் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்ற இரண்டு அதிகாரிகளும் நாடு திரும்பியதும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தற்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் கூடுதல் தகவல்கள் வெளியிட முடியாது என்றும், தொடர்புடைய அதிகாரிகளின் பெயர்கள் வெளியிடப்படமாட்டாது என்றும் காவல்துறை கூறியுள்ளது.
தனியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரொறன்ரோ காவல்துறைச் சங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை அறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது விடுப்பில் இருந்தபோது நடந்த சம்பவம் என்பதால் இதுகுறித்து மேலதிக கருத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளது.





