8.75 சதவீதமாக உயர்த்தப்பட்டது ஓரிரவுக் கொள்கை வீதம்; பணவீக்கம் 5.4 சதவீதமாக உயர்வு
அண்மையகால வெளியக அழுத்தங்களால் பொருளாதாரத்தின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களை சீரமைப்பதற்கு கேள்வி மற்றும் நிரம்பலைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.
அண்மையகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார சமநிலையைப் பேணும் வகையில் கேள்வி, நிரம்பலைக் கட்டுப்படுத்துவதற்காக ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.75 சதவீதமாக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இருப்பினும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமான மத்திய கிழக்கு மோதல்களின் விளைவாகத் தற்போது நாடு இருக்கும் நிலையானது, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது காணப்பட்ட நிலையைவிடப் பன்மடங்கு முன்னேற்றகரமானதாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை இவ்வாண்டில் மூன்றாவது முறையாக கூடியது. அக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கிலான செய்தியாளர் சந்திப்பு 26-05-2026அன்று கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கடந்த மாதத்தில் நாட்டின் பொருளாதார செயலாற்றம் குறித்து சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆளுநர் அளித்த பதில்கள் பின்வருமாறு:
அண்மையகால உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 100 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தி, 8.75 சதவீதமாக அதிகரிப்பதற்கும், நியதி ஒதுக்கு வீதத்தினை 2 சதவீதமாகத் தொடர்ந்து பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த மார்ச் மாதம் 2.2 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களினால் உலக சந்தையில் ஏற்பட்ட எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்பட்ட விலை உயர்வு என்பனவே இப்பணவீக்க அதிகரிப்புக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன.
அதேபோன்று இக்காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலமான வருமானம் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ள போதிலும், வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் தொடர்ந்து வலுவான நிலையில் உள்ளன. அதற்கமைய கடந்த கடந்த ஆண்டு ஜனவரி - ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 1,379 மில்லியன் டொலர்களாகப் பதிவான சுற்றுலாத்துறை மூலமான வருமானம் இவ்வருடம் அதே காலப்பகுதியில் 1,111 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டு ஜனவரி - ஏப்ரல் வரையான காலப்பகுதியில் 2.5 பில்லியன் டொலர்களாகப் பதிவான வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் (வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் நாட்டுக்கு அனுப்பப்பட்ட பணம்) 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளன. அதுமாத்திரமன்றி இவ்வருடத்தின் முதற்காலாண்டில் தேறிய வெளிநாட்டுக்கையிருப்பின் பெறுமதி 6.8 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
பொருளாதார நிலைவரம்
இவ்வருடத்தின் முதற்காலாண்டில் நாட்டின் பொருளாதாரமானது கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பயணித்ததைப்போன்றே பயணிக்கிறது. இருப்பினும் அண்மையகால வெளியக அழுத்தங்களினால் பொருளாதாரத்தின்மீது ஏற்பட்டிருக்கும் தாக்கங்களைப் பொறுத்தமட்டில், 2022 ஆம் ஆண்டு உருவான பொருளாதார நெருக்கடியின்போது இருந்த நிலையை விடப் பன்மடங்கு முன்னேற்றகரமான நிலையே தற்போது உள்ளது. பணவீக்கம், நாணயமாற்று விகிதம் என்பன ஓரளவுக்கு ஆரோக்கியமான நிலையிலேயே இருக்கின்றன. ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி தற்போது சீரடைந்திருக்கிறது. எனவே தற்போது நாட்டின் பொருளாதாரம் மத்திய கிழக்கு மோதல்கள் உள்ளிட்ட வெளியக அழுத்தங்களைக் கையாளக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4 - 5 சதவீதமாக அமையும் என ஜனவரி மாதம் மத்திய வங்கியினால் எதிர்வுகூறப்பட்டது. இருப்பினும் தற்போதைய நிலைவரங்களின் அடிப்படையில் புதிய மதிப்பீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. அண்மையகாலப் போக்குகள் இவ்வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் பொருளாதாரம் மீது எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை ஆராயவேண்டியிருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மதிப்பீடுகள் தொடர்பில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்காக நாணய நிதியத்தின் இயக்குநர் சபை நாளை (இன்று) கூடுகிறது. நாணய நிதியத்தின் பிரதான நிபந்தனைகளில் ஒன்றான செலவினங்களை ஈடுசெய்யக்கூடியவாறான விலை மற்றும் கட்டண நிர்ணய முறைமை குறிப்பிடத்தக்களவு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமகால நிலைவரங்களின் அடிப்படையில் வேறு திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியிருந்தால், அதுபற்றி அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்கும்.
வட்டிவீத உயர்வினால் வாகன இறக்குமதியில் பாதிப்பு
அண்மையகால வெளியக அழுத்தங்களால் பொருளாதாரத்தின்மீது ஏற்படக்கூடிய தாக்கங்களை சீரமைப்பதற்கு கேள்வி மற்றும் நிரம்பலைக் கட்டுப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆகையினாலேயே வட்டிவீதம் உயர்த்தப்பட்டிருப்பதுடன், வாகன இறக்குமதிக்கான கடன் தொகை உச்ச வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்விளைவாக வங்கிகளால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டிவீதமும் உயரும். இது வாகன இறக்குமதியாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சியாளர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரிலும் ஒரே விதமான தாக்கத்தையே ஏற்படுத்தும். இதனூடாக அநாவசிய கடன்பெறுவனவுகள் தவிர்க்கப்படும்.
நிதிமோசடிகளைத் தடுத்தல்
சமகாலத்தில் நாடளாவிய ரீதியில் நிதிமோசடிகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கும் நிலையில், அடுத்த மாதம் 'நிதி மோசடிகளைத் தடுத்தல்' எனும் மகுடத்தில் பரந்துபட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். கருத்தரங்குகள், துண்டுப்பிரசுரங்கள், பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் ஊடாக நிதிமோசடிகளிலிருந்து பாதுகாப்புப்பெறுவது குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டப்படும்.





