தமிழரசு கட்சியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலாக 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமலாக்கம் குறித்தும் பிரஸ்தாபித்தனர்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதத் தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும்மென தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லையென ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பில் அதிருப்தியை வெளிப்படுத்தி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களிடம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடுவதற்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தனர்.
அக்கோரிக்கைக் கடிதத்தின் பிரகாரம் 19-11-2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் பி.ப 1 மணிக்கு ஜனாதிபதிக்கும் தமிழரசுக்கட்சியினருக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமநாயக்கவும் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத் தலைவர் எஸ்.சிறிதரன், பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், கே.எஸ்.குகதாசன், இ.ஸ்ரீநாத், க.கோடீஸ்வரன், து.ரவிகரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நீடித்த இச்சந்திப்பில் பிரதானமாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் தீர்வு குறித்து வழங்கப்பட்டிருக்கும் வாக்குறுதியை மேற்கோள் காண்பித்துப் பேசிய சுமந்திரன், இருப்பினும் அவ்வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எவையும் இன்னமும் முன்னெடுக்கப்படாமை குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
அத்தோடு கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளின்போது அதிகாரப்பகிர்வு தொடர்பில் வழிநடத்தல் குழுவினால் முன்வைக்கப்பட்ட 16 கோட்பாடுகளில் இரண்டைத் தவிர ஏனையவற்றை அப்போதைய மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக்கொண்டமையை நினைவுறுத்திய அவர், அவற்றையும் உள்ளடக்கிய அடுத்தகட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
அதேவேளை அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்தன மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இருந்த போதிலும், அவர்கள் அதனை செய்யவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் அவ்வாய்ப்பு ஜனாதிபதிக்குக் கிடைத்திருப்பதாகவும், அதனை சரிவரப் பயன்படுத்தி அரசியல் தீர்வை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அக்கருத்துக்களை செவிமடுத்த ஜனாதிபதி, அரசியல் தீர்வு குறித்து அவதானம் செலுத்தப்படும் எனவும், அதனை முன்னிறுத்திய நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.
அதனைத்தொடர்ந்து இவ்வருடத்துக்குள் நிலுவையில் உள்ள தேர்தல்களை நடத்துவதாக ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருப்பதாக சுமந்திரனால் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்தியதன் மூலம் அவ்வாக்குறுதியில் 50 சதவீதமானவை நிறைவேற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இருப்பினும் மாகாணசபைத்தேர்தல் இன்னமும் நடத்தப்படவில்லையென விசனம் வெளியிட்டப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் உள்ளடங்கலாக 13 ஆவது திருத்தத்தின் முழுமையான அமலாக்கம் குறித்தும் பிரஸ்தாபித்தனர்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மாகாணசபைத்தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்ற சிக்கல் நிலவுவதாகவும், அதுமாத்திரமன்றி விருப்புவாக்கு முறைமையில் மேற்கொள்ளபடவேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆராயவேண்டும் எனவும் குறிப்பிட்டதுடன், இருப்பினும் மாகாணசபைத்தேர்தல்களை வெகுவிரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் குறிப்பாக மீனவர் பிரச்சினை பற்றியும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதுடன் முல்லைத்தீவு மீனவர் பிரச்சினை குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டபோது, அதுபற்றி ஆராய்வதற்கு முல்லைத்தீவுக்கு வருகைதருவதாக ஜனாதிபதி உத்தரவாதமளித்தார்.
அதேபோன்று சட்டவிரோதமாக சுவீகரிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கான நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் ஜனாதிபதியின் அவதானத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தமது மாவட்டகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் எடுத்துரைத்தனர்.





