மாகாண சபைகள் தொடர்பில் ஜே.வி.பி.தெளிவுபடுத்த வேண்டும்: நளின் பண்டார
மக்களின் தேவைக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். மாகாணசபைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. 1988, 1989களைப் போன்றே இப்போதும் மாகாணசபை முறைமை வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் ஜே.வி.பி. இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீடோ அழுத்தமோ அவசியமல்ல. மக்களின் தேவைக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் 02-09-2025 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி பதவியேற்று ஓரிரு வாரங்களில் ஓராண்டு நிறைவடையவுள்ளது. ஆகக் குறைந்தது ஒரு பாலம் கூட கட்டப்படாத காலகட்டமாகவே இது காணப்படுகிறது. வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவீதம் கூட செயற்படுத்தப்படவில்லை. மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படவில்லை. சுமார் 9 ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட யாழ் மைதானத்துக்கே ஜனாதிபதி தற்போது அடிக்கல் நாட்டியிருக்கின்றார். இதற்கான நிதி இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினாலேயே ஒதுக்கப்படுகிறது. மாறான அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானம் நிர்மாணிக்கப்படப் போவதில்லை.
இதுவரை எந்தவொரு வெளிநாட்டு முதலீடுகளும் கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறிருக்கையில் அபிவிருத்திகள் குறித்து கவனம் செலுத்தாமல் பொலிஸ் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவினரைக் கொண்டு எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளில் மாத்திரமே அவதானம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இவை மக்களை ஏமாற்றுவதற்காக காண்பிக்கப்படும் பிரசாரமாகும். மறுபுறம் கம்பஹா பிரதேசத்தில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் பிரிதொரு பாராளுமன்ற உறுப்பினருடன் சென்ற குழுவொன்று முன்னிலை சோசலிசக் கட்சியின் அலுவலகத்திலிருந்தோரை தாக்கியுள்ளனர்.
அவர்களை தாக்கி பலவந்தமாக அந்த அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்துள்ளனர். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும், அவ்வாறு கட்சி அலுவலகத்திலிருந்தோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தற்போது ஜே.வி.பி. அதன் அடக்குமுறை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கமும் இவர்களுக்கு இல்லை. 88, 89களைப் போன்றே இப்போதும் மாகாணசபை முறைமை வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் தான் ஜே.வி.பி. இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த விடயத்தில் இந்தியாவின் தலையீடோ அழுத்தமோ அவசியமல்ல. மக்களின் தேவைக்கே முன்னுரிமையளிக்கப்பட வேண்டும். மாகாணசபைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. வரலாற்றில் முதல் முறையாக வடக்கு மக்கள் இவ்வாறு மக்கள் ஆணையை வழங்கியிருக்கின்றனர். வரலாற்றில் வடக்கு மக்கள் கோரும் ஆகக் குறைந்த அதிகாரம் மாகாணசபைகளாகும். தமக்கு வாக்களித்த மக்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது எதிர்பார்ப்பினை நிறைவேற்றாமை கவலைக்குரியதாகும் என்றார்.