புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும்: விஜயதாச
தேசிய மக்கள் சக்தி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது.குறுகிய காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் ஊடாகவே நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை தெளிவுப்படுத்த வேண்டும்.இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் என்பது வெறும் கானல் நீரானது என முன்னாள் நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசியலமைப்பினை இயற்றுவதாக தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது.
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பு ஊடாக தீர்வு காண வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்தோம்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளுக்கு அப்போதைய பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு முரணாக ஏற்பட்ட அரசாங்க மாற்றத்தால் புதிய அரசியலமைப்புக்கான பணிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.இதனால் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.
தேசிய மக்கள் சக்தி பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது.குறுகிய காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிட்டது. ஆனால் தற்போது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டதன் பின்னர் புதிய அரசியலமைப்பினை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
பொருளாதார வளர்ச்சி 2026 ஆம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்த நிலைக்கு செல்லும் என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ள நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது வெறும் கானல் நீராகவே அமையும்.யாப்புருவாக்கத்துக்கு இந்த அரசாங்கம் இதுவரையில் ஆரம்பக்கட்ட பணிகளை கூட முன்னெடுக்கவில்லை என்றார்.