வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி: ஆனந்த விஜேபால
பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பாதாளக் குழு குற்றவாளி பல சமூக விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைக்கும் சென்றுள்ளார். பாதாள குழுக்களுக்கிடையிலான மோதலின் பிரதிபலனாகவே இது காணப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 23-10-2025அன்று நடைபெற்ற அமர்வின்போது வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வெலிகம பிரதேச சபையின் தலைவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் உட்பட எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பல விடயங்களை குறிப்பிட்டார்கள்.இந்த கொலை மற்றும் இதற்கு முன்னரான படுகொலைகளினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.
இந்த நாட்டில் பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் உள்ளார்கள். அவர்கள் பல குழுக்களாக பிரிந்துள்ளார்கள்.அவர்களிடம் ஆயுதங்கள் உள்ளன. அவர்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இவ்விடயம் தொடர்பில் நான் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி சபைக்கு விடயங்களை வெளிப்படுத்தினேன்.
வெலிகம பிரதேச சபை உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர என்ற பெயருடைன இவர் வெலிகம லசந்த என்று அழைக்கப்படுவார்.இவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும், அவர் பாதாளக்குழு குற்றவாளி.இவருக்கு எதிராக 6 வழக்குகள் உள்ளன. சிறைதண்டனை அனுபவித்துள்ளார்.தற்போதும் ஒத்திவைக்கப்பட்ட சிறைதண்டனை ஊடாகவே இருந்துள்ளார்.இவர் பல குற்றச்செயல்களுடன் தொடர்புப்பட்டுள்ளார். இந்த நபர் தொடர்பில் பல விடயங்கள் நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்பட்டுள்ளன. அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பாதாளக் குழுக்களின் உறுப்பினர்கள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பாதாள குழுக்களுக்கிடையில் மோதல்கள் உள்ளன. இந்த சம்பவமும் அவ்வாறானதே, ஐக்கிய மக்கள் சக்தி இவ்வாறானவர்களை தமது கட்சிக்கு எவ்வாறு தெரிவு செய்தது என்பதை அறிய முடியவில்லை. பாதாள குழுக்கள் மற்றும் ஏனையோர் இவ்வாறு மோதிக் கொண்டு, இறப்பதை ஒருபோதும் அனுமதிக்கபோவதில்லை. இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
பாதாள குழுக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு பின்னர் மக்கள் பிரதிநிதியான ஒருவர் பாதாளக் குழுக்களின் முரண்பாடுகளினால் கொலை செய்யப்பட்டவுடன் அதனை மக்கள் பிரதிநிதி கொலை என்று எவ்வாறு குறிப்பிடுவது. வெலிகம பிரதேச சபையின் தலைவர் பாதாள குழுக்களுடனும், சமூக விரோத செயற்பாடுகளுடன் தொடர்புப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஐக்கிய மக்கள் சக்தியினர் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.





