வைத்தியர் பற்றாக்குறை மற்றும் முறையற்ற இடமாற்றங்களால் வைத்தியசாலைகளில் கடும் நெருக்கடி - சமல் சஞ்சீவ
குறிப்பாக கண்டி, காலி, மாத்தறை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இந்த இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை.
நாட்டில் நிலவிவரும் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை மற்றும் வைத்தியர்களுக்கான வருடாந்த இடமாற்றங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக, ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பிலும் பல நெருக்கடிகள் எழுந்துள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
19-07-2026அன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றங்களை சுகாதார அமைச்சு விரைவாக நடைமுறைப்படுத்தும் என்று கூறப்படும் கருத்துக்களும், வெளியிடப்படும் அறிக்கைகளும் வெறும் வாய் வார்த்தைகளாகவே காணப்படுகின்றன. இதன் காரணமாகவே நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைகளில் இன்று பாரிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக கண்டி, காலி, மாத்தறை, மொனராகலை, அம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பிரதான மாவட்டங்களிலுள்ள வைத்தியசாலைகளில் இந்த இடமாற்றங்கள் முறையாக இடம்பெறவில்லை. இதனால், வைத்தியசாலை சேவைகளை எவ்வித தடையுமின்றி முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான போதியளவு வைத்திய அதிகாரிகள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிர்வாகச் சீர்கேட்டினால் விசேட வைத்திய நிபுணர்களும் தற்போது கடும் சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
எனவே, சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, முறையான இடமாற்றக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் பொதுமக்களுக்கான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.





