நாட்டில் சிகரெட் உற்பத்தி 32 சதவீதத்தால் வீழ்ச்சி - பிரதி அமைச்சர் நிஷாந்த
2025.01.11 ஆம் திகதியன்று 5.9 வீதத்தால் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது. 2024.01 01 ஆம் திகதி பெறுமதி சேர் வரி 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரித் திருத்தங்களினால் 2025 ஆம் ஆண்டளவில் நாட்டில் சிகரெட் உற்பத்தி 32 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20-08-2026 அன்று நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 2022 ஆம் ஆண்டில் 2.8 பில்லியனாக இருந்த சிகரெட் உற்பத்தி, வரி கொள்கைகளின் மாற்றம் காரணமாக 2025 ஆம் ஆண்டளவில் 1.9 பில்லியனாகக் குறைந்துள்ளது. அரச வருமானத்தை ஈட்டுவதை காட்டிலுமம் புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதார செலவுகள் மற்றும் பிற சமூக பொருளாதார எதிர்மறைக் தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதே இந்தக் கொள்கையின் பிரதான நோக்கமாகும்.
2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 தடவைகள் உற்பத்தி வரிகள், பெறுமதி சேர் வரி மற்றும் நிறுவன வருமான வரிகள் திருத்தப்பட்டுள்ளன. 2023 ஜனவரி 01 மற்றும் ஜூலை 01 ஆகிய திகதிகளில் முறையே 20 வீதம் உற்பத்தி வரிகள் அதிகரிக்கப்பட்டன.
2024 ஜனவரி பணவீக்கச் சுட்டெண் பொறிமுறையின் கீழ் 14 வீதத்தால் உற்பத்தி வரி அதிகரிக்கப்பட்டது.
2025.01.11 ஆம் திகதியன்று 5.9 வீதத்தால் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது. 2024.01 01 ஆம் திகதி பெறுமதி சேர் வரி 15 வீதத்திலிருந்து 18 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
2025.04 01 ஆம் திகதி நிறுவன வருமான வரி 40 வீதத்திலிருந்து 45 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. வரிகள் அதிகரிக்கப்பட்டதன் ஊடாக நேரடி மற்றும் மறைமுக வரி வருமானங்கள் வளர்ச்சியடைந்துள்ளது. இது மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் வருமான முகாமைத்துவத்திற்கும் பங்களித்துள்ளதாகவும் தெரிவித்தார்.





