யாழ்.பழைய பூங்காவை அழிக்க வேண்டிய அவசியம் என்ன?: எம்.ஏ.சுமந்திரன் கேள்வி
தற்போது எவ்விதமான ஆலோசனையோ, வெளிப்படைத்தன்மையோ இன்றி இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில வருடங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு, மூன்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தன. அவ்வாறிருக்கையில் தற்போது பேணிப்பாதுகாக்கப்படவேண்டிய யாழ்ப்பாணம் பழைய பூங்காவை அழிக்கவேண்டிய தேவை என்ன? என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சுமந்திரன் அவரது முகநூல் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: அண்மையில் யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கம் அமைப்பதற்காகத் திடீரென்று அடிக்கல் நாட்டுவதும், மிகப்பழமை வாய்ந்த மரங்கள் தறிக்கப்படுவதும் தெரியவந்தது. முன்னர் இங்கே ஆளுநருக்கான வீடு கட்டப்பட்டபோது சூழலியல் நோக்கில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதும், பின்னர் வேறு அபிவிருத்தித்திட்டங்கள் கைவிடப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயங்களேயாகும்.
தற்போது எவ்விதமான ஆலோசனையோ, வெளிப்படைத்தன்மையோ இன்றி இந்த புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இது சூழலியல் ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துவதுடன், யாழ்ப்பாண மக்களுக்கு வழங்கப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொடையையும் இல்லாமல் செய்கின்றது.
யாழ்ப்பாணத்துக்கு உள்ளக விளையாட்டு அரங்கம் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில வருடங்களுக்கு முன்னர் நான் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்ட உறுப்பினராக இருந்தபோது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு, மூன்று இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தன.
உரிய பொருத்தப்பாடுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மூன்று இடங்கள் முன்மொழியப்பட்ட நிலையில், திடீரென நாம் அனைவரும் பேணிப்பாதுகாக்கவேண்டிய பழைய பூங்காவை அழிக்கவேண்டிய தேவை என்ன? இதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கவேண்டாமா? எல்லா அபிவிருத்தித் திட்டங்களையும் நாம் எதிர்க்கின்றோம் என்று எவரும் கிளர்ந்தெழ வேண்டாம். மாறாக முன்னர் தெளிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் முன்மொழியப்பட்ட மூன்று இடங்களில் ஒன்றுகூடப் பொருத்தமற்றது எனக் காண்பிக்கமுடியுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.





