தொழில் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 17 பேர் கொண்ட குழு
நடைமுறை சவால்கள், பூகோள மட்டத்திலான தொழில் சட்டங்களின் அம்சங்களை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடைமுறைக்கு சாத்தியமான வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பது தொடர்பில் ஆராய்வதற்கு 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவைக்கு நிரூபம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.தொழிலாளர்களின் உரிமைகளை முடக்க வேண்டிய அவசியம் கிடையாது. கடந்த அரசாங்கங்களை போன்று நாங்கள் செயற்படுவதில்லை தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
தொழில் அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தொழில் சட்டத்தை இரத்து செய்வதற்கும், தொழிலாளர்களின் உரிமைகளை முடக்குவதற்கும் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும், அதற்காக புதிய சட்ட வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிக்கு சார்பாக செயற்படும் ஒருசில தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதனை ஒருசில ஊடகங்களும் பெரிதுப்படுத்தியுள்ளன.
கடந்த அரசாங்கங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் செய்த தவறை செய்வதற்காக நாங்கள் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு குறிப்பாக தொழிலாளர்களின் நலன்களை முன்னிலைப்படுத்திய வகையில் அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது.
நடைமுறை சவால்கள், பூகோள மட்டத்திலான தொழில் சட்டங்களின் அம்சங்களை ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் தொழில் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தொழில் அமைச்சின் செயலாளர், தொழில் திணைக்கள ஆணையாளர் மற்றும் தொழில் அமைச்சின் சட்ட ஆலோசகர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் 17 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை நிரூபம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனையின் உள்ளடக்கத்தை திரிபுப்படுத்திய வகையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வங்குரோத்து நிலையடைந்துள்ள எதிர்க்கட்சியினர் இல்லாத விடயங்களை குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். புதிய தொழில் சட்டம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அமையுமே தவிர பலவீனப்படுத்தும் வகையில் அமையாது என்பதை உறுதியாக குறிப்பிட முடியும் என்றார்.