விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது எனக் கூறியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மக்களிடையே ஒரு பிரிவினைவாத போக்கை தொடர்ந்து வளர்த்து வருவதாலும், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதற்கு ஆதரவு தளத்தை விரிவுபடுத்துவதாலும் இந்தியா செவ்வாய்க்கிழமை அதன் மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்ததாகப் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் பிரிவு 3 இன் துணைப் பிரிவுகள் (1) மற்றும் (3) ஐப் பயன்படுத்தி இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் இந்த தடையை விதித்தது.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விடுதலைப் புலிகள் இன்னும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசு கருதுகிறது எனக் கூறியுள்ளது.
மே 2009 இல் சிறிலங்காவில் இராணுவத் தோல்வியடைந்த பின்னரும், தமிழீழ விடுதலைப் புலிகள் 'ஈழம்' (தமிழர்களுக்கான சுதந்திர நாடு) என்ற கருத்தாக்கத்தை கைவிடவில்லை என்றும், நிதி திரட்டல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் 'ஈழம்' நோக்கத்திற்காக இரகசியமாக செயல்பட்டு வருவதாகவும், எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர்கள் அல்லது ஊழியர்கள் சிதறிக்கிடந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை மீண்டும் அணிதிரட்டி உள்நாட்டிலும் பன்னாட்டு அளவிலும் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிகளைத் தொடங்கியுள்ளதாகவும் அது கூறியது.
" தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு குழுக்கள் / கூறுகள் மக்களிடையே ஒரு பிரிவினைவாத போக்கை தொடர்ந்து வளர்த்து வருகின்றன, மேலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கான ஆதரவு தளத்தை மேம்படுத்துகின்றன. இது இறுதியில் இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீது வலுவான சிதைவுச் செல்வாக்கை ஏற்படுத்தும்" என்று அந்த அறிவிப்பில் வேறு சில காரணங்களையும் மேற்கோள் காட்டி கூறப்பட்டுள்ளது.





