நீதி வெளிப்பாடு என்பது உண்மையானதாக இருத்தல் வேண்டும் - நாமல் ராஜபக்ஷ
நீதி வெளிப்பாடு என்பது உண்மையானதாக இருத்தல் வேண்டும். அது ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருவியாகவோ அல்லது பூகோள அரசியல் விளையாட்டுகளில் ஒரு பகடைக்காயாகவோ இருக்கக் கூடாது.
உயிர்த்த ஞாயிறு தின கொடூரச் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் நம் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நீதி வெளிப்பாடு என்பது உண்மையானதாக இருத்தல் வேண்டும். அது ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருவியாகவோ அல்லது பூகோள அரசியல் விளையாட்டுகளில் ஒரு பகடைக்காயாகவோ இருக்கக் கூடாது. அது முழுமையான உண்மையைக் கண்டறியும் ஒரு இறையாண்மை மிக்க தேடலாக இருக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்,பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்று 7 ஆண்டுகள் 21-04-2026அன்று நிறைவடைந்ததை சுட்டிக்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மேற்கண்டவாறு பதிவேற்றம் செய்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : உயிர்த்த ஞாயிறு தினக் கொடூரச் சம்பவம் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், அந்த நாளின் வலி இன்னும் நம் மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. உயிரிழந்த ஒவ்வொரு அப்பாவி உயிர்களையும் நாம் நினைவுகூர்வதோடு, ஆறாத துயரத்தில் இருக்கும் அந்தப் பேரிழப்பிற்குள்ளான குடும்பங்களுடன் நாம் என்றும் துணை நிற்போம்.
அதேவேளை, அவர்களின் நினைவுகளுக்கு நாம் மதிப்பளிக்கும் இந்த சந்தர்ப்பத்தில், உண்மையைத் தேடும் முயற்சி என்பது ஆதாரங்களை விட அரசியல் நாடகங்களுக்கு முன்னுரிமை அளிப்பவர்களால் திசைதிருப்பப்பட்டுள்ளது என்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள முடிகிறது.
நீதி வெளிப்பாடு என்பது உண்மையானதாக இருத்தல் வேண்டும். அது ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் கருவியாகவோ அல்லது பூகோள அரசியல் விளையாட்டுகளில் ஒரு பகடைக்காயாகவோ இருக்கக் கூடாது. அது முழுமையான உண்மையைக் கண்டறியும் ஒரு இறையாண்மை மிக்க தேடலாக இருக்க வேண்டும்.
இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டு சிதைந்துப்போன ஒவ்வொரு குடும்பத்திற்கும் நாம் செய்ய வேண்டிய கடமை என்னவென்றால், அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்படும் கருத்தாடலுக்கு அப்பால் சென்று, இந்த மிலேட்ச சம்பவத்தின் பின்னாலுள்ள கட்டமைப்பையும், உண்மையான சூத்திரதாரிகளையும் வெளிப்படுத்த வேண்டும்.
மக்களின் பாதுகாப்பும், நாட்டின் தேசிய பாதுகாப்பை இனி ஒருபோதும் அரசியல் நோக்கங்களுக்காக பலியாகிவிடக் கூடாது. தற்காலிக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குப் பணிந்துப் போகாமல், காயங்களை ஆற்றக்கூடிய உண்மையை நாடும் ஒரு தலைமைத்துவதற்கு இலங்கை மாற்றமடைய வேண்டும்.





