தபால் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அசௌகரியம்
தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். இதனால் 18-08-2025 அன்று மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.
தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன. தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும்.
தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும். இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.





