சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறையை நிறுவுங்கள்: ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கும் என நாம் நம்பவில்லை.

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கும் என நாம் நம்பவில்லை. ஆகவே அம்மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு, தொழில்நுட்ப உதவிகள் என்பன உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னுரிமை வழங்கவேண்டும் என தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து கையெழுத்துப் போராட்டத்தின் ஊடாகப் பெற்றுக்கொண்ட கையொப்பங்களுடன்கூடிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கான கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு எழுதப்பட்டு, ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும் பாதுகாப்புச்சபைக்கும் மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதி செய்யப்பட்டு, 23-09-2025 கொழும்பிலுள்ள ஐ.நா வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்சேவிடம் கையளிக்கப்பட்டுள்ள கடிதத்தில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்பில் செல்வராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமசந்திரன், முருகேசு சந்திரகுமார் மற்றும் எஸ்.நவீந்திரா (வேந்தன்) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி கையெழுத்துப்போராட்டத்தின் ஊடாகத் திரட்டப்பட்ட பொதுமக்களின் கையெழுத்துக்களும் அக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கை தொடர்பாக உங்களால் கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் சார்ந்த சில அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்தோடு மனித உரிமை மீறல்களை முடிவுக்குக்கொண்டுவந்து, பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கான இந்த வரலாற்று வாய்ப்பை உரியவாறு பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்துக்கு நீங்கள் அழைப்புவிடுத்திருந்தீர்கள்.
தமிழ் மக்களாகிய நாம் கடந்த 76 வருடகாலமாக இலங்கை அரசினால் நன்கு கட்டமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட இனவழிப்புக்கு முகங்கொடுத்துவந்திருக்கிறோம். தற்போதும் அத்தகைய இனவழிப்பு அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்திருப்பதுடன் சர்வதேச சமூகத்திடமிருந்து நீதிக்காகக் காத்திருக்கும் நாம், பொறுப்புக்கூறல் தொடர்பான உங்களது நிலைப்பாட்டினால் அதிருப்தியடைந்துள்ளோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்துப் பேசப்பட்டிருப்பினும், மேலும் சில விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம். 1948 இல் இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இதுவரை ஆட்சிசெய்த சிங்கள அரசாங்கங்களினால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனவழிப்பினால் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இன்றும் அந்த இனவழிப்பு தொடர்கின்றது.
அதேபோன்று 1948 ஓகஸ்ட் 20 ஆம் திகதி தமிழ் அரசியல் தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரஜாவுரிமைச்சட்டத்தின் விளைவாக பெருந்தோட்டப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்த சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி தமிழ் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் பிரஜாவுரிமையை இழந்தார்கள்.
தமிழர்களின் வரலாற்று வாழ்விடங்களில் அவர்களை எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராக மாற்றும் நோக்கில் சிங்கள பேரினவாத அரசாங்கங்களினால் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைக்கு அமைவாக காலத்துக்குக்காலம் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களில் வெவ்வேறு குடியேற்றத்திட்டங்களின் ஊடாக சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
1956, 1958, 1977, 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களை இலக்குவைத்து அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கலவரங்களின் ஊடாக, தமிழர்களின் சொத்துக்கள் மற்றும் உடைமைகள் அழிக்கப்பட்டதுடன் அவர்கள் நாட்டைவிட்டு உலகின் ஏதேனுமொரு பாகத்துக்குத் தப்பிச்செல்வதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழில் செம்மணி ஆகிய பகுதிகளில் மனிதப்புதைகுழிகள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழியில் 200 க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினர் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு, தற்போது மரணதண்டனை அனுபவித்துவரும் முன்னாள் இராணுவ கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, மேலும் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தன்னால் அடையாளம் காண்பிக்கமுடியும் எனத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தினாலும், இராணுவத்தினராலும் இழைக்கப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும், உரியவாறு பேணப்படுதையும், எதிர்கால விசாரணைகளின்போது சமர்ப்பிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டியது அவசியமாகும்.
செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளை இலங்கை அரசாங்கம் பக்கச்சார்பற்ற முறையில் முன்னெடுக்கும் என நாம் நம்பவில்லை. ஆகவே அம்மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு, தொழில்நுட்ப உதவிகள் என்பன உள்வாங்கப்படவேண்டும் என வலியுறுத்துகின்றோம். இதனிடையே எவ்வித இடையூறுகளுமின்றி சர்வதேச விசாரணை செயன்முறை தொடரவேண்டும் எனவும் கோருகின்றோம்.
மேலும் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படவிருக்கும் பிரேரணையானது உள்ளக விசாரணைப்பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான வாய்ப்பையும், காலத்தையும் இலங்கைக்கு வழங்கும் வகையிலான எந்தவொரு பரிந்துரையையும் உள்ளடக்கியிருக்கக்கூடாது. அத்தோடு இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்னுரிமை வழங்கவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.