பௌத்த பாரம்பரியம், கலாசாரத்தைப் பாதுகாப்பதில் இந்திய அரசு உறுதி
அண்மையில் இந்திய அரசு சரியான நேரத்தில் எழுப்பிய ஆட்சேபனைகள் காரணமாக, ஹொங்காங்கில் புத்த பெருமானின் புனித நினைவுச்சின்னங்களை ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய அரசு பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் உறுதியாக உள்ளது. அண்மையில் இந்திய அரசு சரியான நேரத்தில் எழுப்பிய ஆட்சேபனைகள் காரணமாக, ஹொங்காங்கில் புத்த பெருமானின் புனித நினைவுச்சின்னங்களை ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டது என்று பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் கீழான கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவை, மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஆதரவுடன் பாத்பைண்டர் மன்றம் புராதன பாளி இலக்கண நூலான பாலவதரோவை மீள் பதிப்பு செய்துள்ளது. இந்நூல் கண்டியில் உள்ள ஶ்ரீ தலதா மாளிகையில் கடந்த சனிக்கிழமை பிரதி உயர் ஸ்தானிகர் டாக்டர் சத்யாஞ்சல் பாண்டே மற்றும் பாத்பைண்டர் மன்றத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே ஶ்ரீ சரணங்கர விமலதம்மபிதன தேரர், மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய கலாநிதி நியாங்கொட விஜிதஶ்ரீ தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய வெதருவே தர்மகீர்த்தி ஶ்ரீ இரத்தினபால உபாலி தேரர், மற்றும் மல்வத்து & அஸ்கிரிய பீடங்களின் ஏனைய தேரர்களிடம் இந்நூலின் பிரதிகள் கையளிக்கப்பட்டன.
இந்திய அரசாங்கத்தின் கீழான கலாசார உறவுகளுக்கான இந்திய பேரவை, மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் ஆதரவுடன் பாத்பைண்டர் மன்றத்தினால் வெளியிடப்படும் இரண்டாவது புராதன பாளி நூலே பாலவதரோ ஆகும், இதற்கு முன்னதாக நாமமாலா மீள் பதிப்பு செய்யப்பட்டது.
இலங்கையில் உள்ள பிரிவேனாக்கள் மற்றும் பாடசாலைகளில் பல தலைமுறைகளாக பாளி மொழி கற்கைகளுக்கான முக்கிய ஆதாரமாக பயன்படுத்தப்படும் இந்நூல், இலங்கையில் பாளி மொழியைக் கற்கும் மாணவர்கள் எளிதில் பயன்பெற வழிசமைக்கும். இந்நிகழ்வின்போது, பாளியை ஒரு செம்மொழியாக அறிவித்தமைக்கும், பாளி மொழியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காகவும் மகாசங்கத்தின் தலைமை பீடத்தினர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை பாராட்டி நன்றி தெரிவித்தனர். பாளி மொழியின் பகிரப்பட்ட பாரம்பரியம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நிலைபேறான ஆன்மீக மற்றும் கலாசார பிணைப்பின் சக்திமிக்க அடையாளமாகும்.
இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பிரதி உயர்ஸ்தானிகர், இந்திய அரசு பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் உறுதியாக உள்ளது என மீளவலியுறுத்தினார். அண்மையில் இந்திய அரசு சரியான நேரத்தில் எழுப்பிய ஆட்சேபனைகள் காரணமாக, ஹொங்காங்கில் புத்த பெருமானின் புனித நினைவுச்சின்னங்களை ஏலம் விடுவது ஒத்திவைக்கப்பட்டது.
விற்பனையை நிறுத்தி துரிதமான நடவடிக்கையை இந்தியா எவ்வாறு எடுத்தது என்பதை பிரதி உயர் ஸ்தானிகர் இங்கு குறிப்பிட்டு, அதன் சட்டவிரோத செயற்பாடுகளை எடுத்துரைத்து, 1898 ஆம் ஆண்டு பிப்ரஹ்வாவில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சின்னங்களை இந்தியாவில் சரியான இடத்திற்கு வழங்கவேண்டிய அவசியத்தை இந்தியா சுட்டிக்காட்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.





