நாடளாவிய ரீதியில் 68 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்; 37 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்
கொழும்பில் 14-07-2025 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 68 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 37 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்தத்துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 24 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளாரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் 14-07-2025 அன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த தகவல்களை வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 13 ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 68 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த துப்பாக்கிப்பிரயோகங்களில் 50 திட்மிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையவையாகும். ஏனைய 18 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களால் இடம் பெற்றவையாகும்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவர்களில் 34 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாவர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 30 பேர் திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களாவர்.
எவ்வாறாயினும் இந்த பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த நாட்களில் பொலிஸார் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் வரையான காலப்பகுதியில் 23 ரி-56 ரக துப்பாக்கிகள் 46 கைத்துப்பாக்கிகள் 30 ரிவோல்வர் ரக துப்பாக்கிகள் உட்பட உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்ட 1165 துப்பாக்கிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 24 துப்பாக்கிதாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிப்பிரயோகங்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.