ஹேமமாலினி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி.க்கு 2 நாட்கள் பரப்புரை செய்ய தடை
அடுத்த 48 மணி நேரத்திற்கு சுர்ஜேவாலா தேர்தல் பேரணிகள் அல்லது பொதுக்கூட்டம் நடத்த முடியாது.
நடிகரும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி குறித்து அவதூறாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலாவுக்கு தேர்தல் பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு சுர்ஜேவாலா தேர்தல் பேரணிகள் அல்லது பொதுக்கூட்டம் நடத்த முடியாது.
"தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல்கள் தொடர்பான விஷயத்தில் அவருக்கு வழங்கப்பட்ட அல்லது பின்னர் வழங்கப்படவுள்ள எந்தவொரு உத்தரவு / அறிவிப்புக்கும் பாரபட்சம் இல்லாமல், ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது அவர் அளித்த மறுக்கப்பட்ட அறிக்கையை ஆணையம் கடுமையாக கண்டிக்கிறது மற்றும் தவறான நடத்தைக்காக ரண்தீப் சுர்ஜேவாலாவை கண்டிக்கிறது" என்று தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
"இந்திய அரசியலமைப்பின் 324 வது பிரிவு மற்றும் இது தொடர்பாக செயல்படுத்தும் பிற அனைத்து அதிகாரங்களின் கீழும், ஏப்ரல் 16 (செவ்வாய்க்கிழமை) மாலை 6:00 மணி முதல் 48 மணி நேரத்திற்கு தேர்தல்கள் தொடர்பாக எந்தவொரு பொதுக் கூட்டங்கள், பொது ஊர்வலங்கள், பொதுப் பேரணிகள், சாலைக் காட்சி ஊர்வலங்கள் (ரோடு ஷோக்கள்) மற்றும் நேர்காணல்கள், ஊடகங்களில் பொதுக்கூட்டப் பேச்சுகள் ஆகியவற்றை நடத்த ஆணையம் தடை விதிக்கிறது" என்று அது மேலும் கூறியுள்ளது.





